Ennore Ammonia Gas Leak News In Tamil: எண்ணூர் பெரியக்குப்பம் பகுதியில் தனியார் உரத் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று நள்ளிரவு துறைமுகத்தில் இருந்து இந்த தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த தொழிற்சாலைக்கு அருகே உள்ள பெரியக்குப்பம், சின்னக்குப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் உள்ளிட்ட சில கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு வாந்தி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல், மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த மக்கள், உடனடியாக முக்கியமான உடைமைகளை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு உயிர் பயத்தில் சாலையில் எங்கே செல்வது என்ற குழப்பத்துடனும், என்ன நடக்கிறது என்பதை தெரியாமலும் பதற்றமாக ஓடியுள்ளனர்.
சிறிது நேரத்தில் இந்த செய்தி தீயாய் பரவியது. இதனால் அக்கம் பக்கத்து பகுதிகளில் இருந்த மக்களும் பயத்துடன் வீட்டை பூட்டி விட்டு சாலைகளில் நின்றபடியே என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை இருசக்கர வாகனம், ஆட்டோவில் ஏற்றி அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
உடனே சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அங்கு தவித்த மக்களை மீட்டு பல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய சமுதாய நலக்கூடம் மற்றும் தேவாலயங்களில் தங்க வைத்தனர். இந்த வாயு கசியால் 30க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பணி முடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற இளைஞர்கள் தான் இந்த அமோனியா வாயு வை முதலில் சுவாசித்து காற்றில் ஏதோ மாறுமாடு உள்ளதை கண்டறிந்து மக்களை அலர்ட் செய்துள்ளனர். அதனால் தான் கடும் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட எண்ணெய் கசிவு பாதிப்பில் இருந்தே மீளாத எண்ணூர் மக்களுக்கு இந்த வாயு கசிவு மேலும் இடியாக அமைந்துவிட்டது. இனி இந்த பகுதியில் வாழவே முடியாத என்ற நிலையில் அவர்கள் தவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக அந்த தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று இரவு அம்மோனியா இறக்கும் பைப்லைனில் ஒரு அசாதாரணத்தை உணர்ந்ததால் உடனே அதனை தடுக்கும் நடைமுறைகளை செய்ததாகவும், குறுகிய காலத்தில் நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளது.
அமோனியா வாயு கசிவு தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளதாகவும், புது வருட விடுமுறை முடிந்து, ஜனவரி 2 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எண்ணூர் எண்ணெய் கழிவு தொடர்பான வழக்கையும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், தற்போது வாயு கசிவு வழக்கையும் விசாரிக்க உள்ளது.
இதற்கு நடுவே எண்ணூரில் வாயுக் கசிவு ஏற்பட்ட கோரமண்டல் ஆலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆய்வுக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
நேற்று சென்னை எண்ணூர் பகுதியில் நடந்தது மிகப்பெரிய விபத்தாக மாறாமல் தடுக்கப்பட்டாலும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற வாயு கசிவு ஏற்படாமல் தடுக்க அந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க - விஸ்ரூபமெடுக்கும் எண்ணூர் அமோனியா வாயு கசிவு விவகாரம்.. மக்கள் போராட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ