இலங்கைக்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை விமர்சித்துள்ளனர். அதற்கு பதில் கொடுத்திருக்கும் திமுக, நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் இப்போது இருக்கும் பிரச்சனைகளை திசை திருப்புவதற்காக கச்சத்தீவு விவகாரத்தை பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இப்போது பேசிக்கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக இருக்கும் மோடி கச்சத்தீவு விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன? தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யாமல் இருக்க என்ன செய்தார்? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறது.
காங்கிரஸ் கட்சி தரப்பில் அக்கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் கச்சத்தீவு விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் எழுதியிருக்கும் பதிவில், 1974ஆம் ஆண்டில் இரு நாடுகளிடயே நடந்த பரிமாற்றத்தைத் பிரதமர் மோடி இப்பொழுது ஏன் கிளப்புகிறார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். கச்சத்தீவின் பரப்பளவு 1.9 சதுர கி்.மீ. அதனைத் தந்து 6 லட்சம் இலங்கைத் தமிழர்களை மீட்டு அவர்களுக்குச் சுதந்திரமும் புது வாழ்வும் தந்தவர் இந்திரா காந்தி என தெரிவித்திருக்கும் சிதம்பரம், "மோடி செய்தது என்ன? 2000 சதுர கி.மீ இந்திய பூமியைச் சீனா அபகரித்திருக்கிறது. ஆனால், எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை என்று சொல்லி சீனாவின் ஆக்கிரமிப்பைத் திரு மோடி நியாயப்படுத்தினார். பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை சீனா உலகமெங்கும் பரப்பியது. சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட 1000 மடங்கு பெரியது. நல்லுணர்வுடன் பரிமாற்றம் வேறு, காழ்ப்புணர்வுடன் அபகரிப்பது வேறு" என்று பதிலளித்துள்ளார்.
கச்சத்தீவு விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் சிதம்பரம் பதில் அளித்துள்ளார். அவருக்கு எக்ஸ் பக்கத்தில் கொடுத்திருக்கும் பதிலில், " பழிக்கு பழி என்பது பழையது. Tweet for Tweet என்பது புதிய ஆயுதம். வெளியுறவு அமைச்சர் திரு ஜெய்சங்கர் 27-1-2015 தேதியிட்ட RTI பதிலைப் பார்க்கவும். 27-1-2015 அன்று திரு ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார் என்று நான் நம்புகிறேன். அப்போது கொடுக்கப்பட்ட பதிலில், கச்சத்தீவு தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை இந்தியா ஒப்புக்கொண்ட சூழ்நிலையை நியாயப்படுத்தியது." என தெரிவித்துள்ளார்.
அப்போது ஒப்புக் கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சரும், அவரது அமைச்சகமும் ஏன் இப்போது அந்தர் பல்டி அடிக்கிறார்கள் என கேட்டிருக்கும் சிதம்பரம், ஜெய்சங்கர் எவ்வளவு வேகமாக தன்னுடைய நிறத்தை மாற்றிக் கொள்கிறார் என விமர்சித்துள்ளார். வெளியுறவுத்துறை அதிகாரியாக இருந்து வெளியுறவுத்துறை செயலாளராக உயர்ந்து, இப்போது பாஜக - ஆர்எஸ்எஸ் ஊதுகுழலாக ஜெய்சங்கர் மாறியிருக்கிறார் என்றும் காட்டமாக சிதம்பரம் விமர்சித்துள்ளார். மேலும், ஜெய்சங்கரின் இந்த திடீர் அந்தர்பல்டிகளை அக்ரோபாட்டிக் விளையாட்டுகளின் வரலாற்றில் பதிவு செய்யப்படும் என்றும் கிண்டலடித்துள்ளார் சிதம்பரம்.
மேலும், கடந்த 50 ஆண்டுகளில் மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது உண்மைதான் என்றும், அதேபோன்று பல இலங்கை மீனவர்களை இந்தியா கைது செய்துள்ளது என்றும் சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு அரசாங்கமும் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை விடுவித்துள்ளன என்று கூறியிருக்கும் அவர், ஜெய்சங்கர் வெளியுறவுத் துறை அதிகாரியாக இருந்தபோதும், வெளியுறவுச் செயலராக இருந்தபோதும், வெளியுறவு அமைச்சராக இருந்தபோதும் இது நடந்துள்ளது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார்.
அப்படி இருக்கும்போது, இப்போது திடீரென ஜெய்சங்கர் காங்கிரஸுக்கும், தி.மு.க.வுக்கும் எதிராகப் பேசுவதற்கு என்ன மாற்றம் ஏற்பட்டது?, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும், பாஜக ஆட்சியில் இருந்தபோதும், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தபோதும் மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படவில்லையா? என்றும் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 2014 முதல் மோடி ஆட்சியில் இருந்தபோது மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படவில்லையா? என்றும் சிதம்பரம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
மேலும் படிக்க | சின்னம் பார்த்து வாக்களிக்காதீர்கள் - பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வேண்டுகோள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ