ஊர்க்காவல் படையினரின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., தமிழ்நாட்டின் பாதுகாப்பையும், பொது ஒழுங்கையும் உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றும் ஊர்க்காவல் படையினரின் மிக நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், உச்சநீதிமன்றமே தலையிட்ட பிறகும் அவர்களின் கோரிக்கைகள் உண்மையாக நிறைவேற்றப்படவில்லை என்பது தான் வேதனையளிக்கும் உண்மையாகும்.
திருவிழாக்கள், போராட்டங்கள், வன்முறைகள் மற்றும் எதிர்பாராத வகையில் ஏற்படும் நெருக்கடியான சூழல்களில் சட்டம் & ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழக காவல்துறையினருக்கு உதவியாக இருப்பவர்கள் ஊர்க்காவல் படையினர் ஆவர். பெயரளவில் இந்த அமைப்பு காவல்துறைக்கு துணை அமைப்பு என்றாலும், கள அளவில் இவர்கள் காவல்துறைக்கு இணையாகவே செயல்பட்டு வருகின்றனர். ஏட்டளவில் பார்த்தால் ஊர்க்காவல் படையினரின் தேவை எல்லா நாளும் தேவைப்படாது என்ற தோற்றம் நிலவுகிறது. ஆனால், காவல்துறையில் அதிகரித்துக் கொண்டே செல்லும் காலியிடங்கள், பெருகி வரும் காவல்பணி தேவைகள் ஆகியவற்றைக் கொண்டு பார்க்கும் போது ஊர்க்காவல் படையின் சேவை ஒவ்வொரு நாளும் தேவை. இது காவல்துறையின் அனைத்து நிலை அதிகாரிகளும் ஒப்புக்கொண்ட உண்மை.
ஆனால், இவர்களுக்கு உழைப்புக்கேற்ற வகையில் ஊதியம் வழங்க வேண்டும் என்ற குரல் மட்டும் உரியவர்களின் காதுகளில் விழவில்லை. ஊதியத்தை உயர்த்த வேண்டும்; ஊர்க்காவல் படையை காவல்துறையின் ஓர் அங்கமாக மாற்ற வேண்டும்; தங்களை பணி நிலைப்பு செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது தான் அவர்கள் நெடுங்காலமாக முன்வைக்கும் கோரிக்கைகள் ஆகும்.
ஊர்க்காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.152 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.2,800 ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. இதை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஊர்க்காவல் படையினர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களின் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்தி ஆணையிட்டது. இதன்மூலம் ஊர்க்காவல்படை வீரர்கள் அனுபவித்து வந்த பொருளாதார நெருக்கடிகள் அகலும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை 2017-ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்திய தமிழக அரசு, அவர்களின் அதிகாரப்பூர்வ பணி நாட்களின் எண்ணிக்கையை 25-லிருந்து ஐந்து நாட்களாக குறைந்து விட்டது.
இதனால் அவர்களுக்கான தினக்கூலி 3 மடங்குக்கும் மேல் அதிகரித்தாலும் கூட மாத ஊதியம் ரூ.2,800 என்ற அளவைத் தாண்டவில்லை. அதுமட்டுமின்றி, ஊர்க்காவல் படையினருக்கு மாதத்திற்கு 5 நாட்கள் மட்டுமே 8 மணி நேர பணி என்று அரசு அறிவித்திருந்தாலும், அவர்கள் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வீதம் மொத்தம் 10 நாட்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று காவல் அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். 4 மணி நேரம் மட்டுமே அவர்கள் பணி செய்வதாக கணக்கில் காட்டப் பட்டாலும் அவர்கள் அதிகபட்சமாக 10 மணி நேரம் வரை பணியாற்ற வைக்கப்படுகிறார்கள்; பணி செய்யும் நாட்களும் மாதத்திற்கு 20 நாட்களுக்கு மேல் நீடிக்கிறது. இதனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அர்த்தமற்றதாகிப் போய் மாதம் முழுவதும் பணியாற்றினாலும் ரூ.2800 தான் ஊதியம் என்ற பழைய நிலையே நீடிக்கிறது. இந்த ஊதியத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துவது சாத்தியமற்றதாகும்.
ஊர்க்காவல் படையினரின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு காலகட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஆனாலும், அவை கோரிக்கைகளாகவே உள்ளன. ஊர்க்காவல் படையில் கிடைக்கும் ஊதியத்தை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்த முடியாததால், மதுரை மாவட்டம் செக்கானூரணியை அடுத்த பூவரசம்பட்டியைச் சேர்ந்த சிவராஜா என்ற ஊர்க்காவல்படை வீரர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கடிதம் எழுதி வைத்து விட்டு நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான ஊர்க்காவல்படையினரின் மனநிலை இப்படியாகத் தான் உள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஊர்க்காவல் படையினருக்கு ரூ.18,000 வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது. தமிழகத்திலும் அதே அளவு ஊதியம் வழங்கி, அவர்களுக்கு பணிநிலைப்பு வழங்கப்பட்டால், அவர்களின் வாழ்க்கையில் வசந்தம் வீசும். பல்வேறு துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றி வரும் தமிழக முதலமைச்சர், இந்த கோரிக்கையையும் நிறைவேற்றி வைக்க வேண்டும். இம்மாத இறுதியில் தமிழக சட்டப்பேரவையில் நடைபெறவிருக்கும் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் ஊர்க்காவல் படையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.