PMK வன்னியர் இட ஒதுக்கீடு: டிசம்பர் 1 முதல் TNPSC முன் பெருந்திரள் போராட்டம்!

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேலைவாய்ப்பில் வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக TNPSC முன் போராட்டம் நடத்தப்படும். இந்தத் தகவலை பா.ம.க மூத்தத் தலைவர் ஜி.கே. மணி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 25, 2020, 03:25 PM IST
  • PMK வன்னியர் இட ஒதுக்கீடு: டிசம்பர் 1 முதல் TNPSC முன் பெருந்திரள் போராட்டம்!
  • பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு
PMK வன்னியர் இட ஒதுக்கீடு: டிசம்பர் 1 முதல் TNPSC முன் பெருந்திரள் போராட்டம்!  title=

புதுடெல்லி: பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேலைவாய்ப்பில் வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக TNPSC முன் போராட்டம் நடத்தப்படும். இந்தத் தகவலை பா.ம.க மூத்தத் தலைவர் ஜி.கே. மணி அவர்கள் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை பின்வருமாறு:

தமிழ்நாட்டின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் உள்ளிட்ட அனைத்து சமுதாயங்களின் பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்; வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்துவது என்று பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கங்களின் கூட்டுப் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையில் போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து 7 பேர் கொண்ட போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் இணையவழியில் ஆலோசனை நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் திசம்பர் ஒன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி திசம்பர் 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) முன் பெருந்திரள் போராட்டம் நடத்தப்படும். முதல் நாள் போராட்டம் சென்னை ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பில் நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திசம்பர் 2-ஆம் தேதி புதன்கிழமை இரண்டாம் நாள் போராட்டம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பிலும், திசம்பர் 3-ஆம் தேதி வியாழக்கிழமை மூன்றாம் நாள் போராட்டம் திருவள்ளூர் கிழக்கு மற்றும் மத்திய மாவட்டங்களின் சார்பிலும், திசம்பர் 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நான்காம் நாள் போராட்டம் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்டங்களின் சார்பிலும் நடத்தப்படும். நான்கு நாள் நடைபெறும் போராட்டங்களுக்கும் போராட்டக் குழுவின் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்பார். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் மாநில துணைப்பொதுச்செயலாளர்கள்,  மாநில துணைத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிப்பார்கள். அனைத்து நிலை நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் பங்கேற்பர்.

இரண்டாம் கட்டமாக திசம்பர் 10-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் (Village officer's office) முன் மக்கள்திரள் போராட்டம் நடத்தப்படும். அடுத்தடுத்தக்கட்ட போராட்டங்கள் குறித்த விவரங்களும், தேதிகளும் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பா.ம.க சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையானசெய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News