சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சுவாதி(25). செங்கல்பட்டு அருகேயுள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 24-ம் தேதி அதிகாலையில் அவர் ரெயில் நிலையம் வந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டார். இந்த சம்பவம் சென்னையில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கொலையாளியின் பெயர் ராம்குமார் என்றும், அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மேன்சனில் தங்கி இருந்ததும், சுவாதியை கொலை செய்து விட்டு அவர் தனது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்துக்கு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை மீனாட்சிபுரத்துக்கு சென்று ராம்குமாரின் வீட்டை சுற்றிவளைத்தனர்.
போலீசார் தன்னை நெருங்கிவிட்டதை உணர்ந்த ராம்குமார், அவர்களிடம் சிக்கிக்கொள்வதற்கு முன்பு தற்கொலை செய்ய முடிவு செய்து பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். இதனால் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. சுதாரித்துக்கொண்ட போலீசார் பாய்ந்து சென்று, ராம்குமாரின் கழுத்தில் ஒரு துணியை சுற்றி, உடனடியாக அவரை மீனாட்சிபுரத்தில் இருந்து செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ராம்குமாருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். சரியான நேரத்தில் போலீசார் ராம்குமாரை ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் ராம்குமாரை காப்பாற்ற முடிந்தது. அவருக்கு டாக்டர்கள் குழுவினர் 18 தையல்கள் போட்டனர். 2 மணி நேரம் இந்த சிகிச்சை நடந்தது.
இந்த நிலையில் பிடிபட்ட ராம்குமாரிடம், சுவாதி கொலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சென்னை நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் தேவராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் காலை நெல்லை சென்று அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, சுவாதியை கொலை செய்ததை ராம்குமார் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சிகிச்சையின் காரணமாக ராம்குமார் ஓரளவு குணமாகிவிட்டதாகவும், அவரது கழுத்தில் உள்ள காயங்கள் ஆறி வருவதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது கழுத்தில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவரால் தற்போது அதிக நேரம் பேச முடியாது என்றும், ஒரு வாரம் சென்ற பின்னரே அவரால் முழுமையாக பேச முடியும் என்றும் கூறினார்கள். மேலும் அவர் இயல்புநிலைக்கு திரும்பிவிட்டதாகவும், பயணம் செய்யும் நிலைக்கு தயாராகிவிட்டதாகவும் கூறினர்.
ராம்குமாரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவரை சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். முன்னதாக ராம்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். நேற்று கோர்ட்டுக்கு விடுமுறை தினம் என்பதால், அவரை மாஜிஸ்திரேட்டின் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்த எண்ணினர். ஆனால் மாஜிஸ்திரேட்டின் வீட்டுக்கு அழைத்து சென்று ஆஜர்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால், ஆஸ்பத்திரிக்கு மாஜிஸ்திரேட்டை வரவழைத்து, அவர் முன்னிலையில் ராம்குமாரை ஆஜர்படுத்த முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து நெல்லை முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு ராமதாசை நேற்று மதியம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அவரது முன்னிலையில் ராம்குமாரை ஆஜர்படுத்தினார்கள். அப்போது ராம்குமாரிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து இன்று சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர 14-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ராம்குமாரை ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு மாஜிஸ்திரேட்டு ராமதாஸ் உத்தரவிட்டார்.
பிறகு கொலையாளி ராம்குமாரை சென்னைக்கு அழைத்து வரும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். இதற்காக 2 ஆம்புலன்சுகள் கொண்டு வரப்பட்டு ஆஸ்பத்திரி வாசலில் நிறுத்தப்பட்டன. சரியாக நேற்று மாலை 4.25 மணிக்கு ராம்குமாரை வார்டில் இருந்து வெளியே கொண்டு வந்து ஒரு ஆம்புலன்சில் ஏற்றினார்கள். அப்போது ராம்குமாரின் முகம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக
அவரது முகத்தை துணியால் மூடி இருந்தனர். ஆம்புலன்சில் ராம்குமாரை ஏற்றியபோது அங்கு குவிந்து இருந்த பத்திரிகை புகைப்படக்காரர்கள் மற்றும் தொலைக்காட்சி கேமராமேன்கள் படம் எடுக்க முயன்றனர். ஆனால் அவர்களை படம் பிடிக்கவிடாமல் போலீசார் தடுத்தனர்.
ராம்குமார் ஏற்றப்பட்டதும் ஆம்புலன்ஸ் புறப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை வந்தது. ஆம்புலன்ஸ் அங்கிருந்து நேராக சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு சென்றது. ராம்குமாரின் உடல் நிலையை ஆய்வு செய்ய டாக்டர் மயில்வாகனன் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ராம்குமாரின் உடல் நிலையை பரிசோதித்தனர். பிறகு அவர்கள் ராம்குமார் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்தனர்.
இன்று எழும்பூர் கோர்ட்டில் கொலையாளி ராம்குமாரை ஆஜர்படுத்துவதாக இருந்தது. ஆனால் கோர்ட்டு கொலையாளி ராம் குமாரை அழைத்து சென்று ஆஜர்படுத்த உகந்த சூழ் நிலை இல்லை என்று தெரி விக்கப்பட்டது.எழும்பூர் 14-வது குற்றவி யல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு நீதிபதி கோபிநாத் , ராயப்பேட்டை மருத்துவமனைக்கு நேரில் வந்து வாக்குமூலம் பெற முடிவு செய்யப்பட்டது. அதன்படி நீதிபதி கோபிநாத் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.மருத்துவ ஆவணங்கள், போலீசாரின் வழக்குப்பதிவு ஆவணங்களை அவர் பார்வையிட்டார். பிறகு அவர் கொலையாளி ராம்குமாரிடம் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து அவன் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.