தமிழகத்தின் 13 வாக்குச் சாவடிகளில் வரும் 19-ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது!
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த வாக்குப்பதிவின் போது தர்மபுரி, கடலூர், திருவள்ளூர் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட 46 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவில் முறைகேடு மற்றும் குளறுபடிகள் நடைப்பெற்றதாக புகார் எழுந்தது.
இந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்கப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ பரிந்துறை செய்தார்.
இந்நிலையில் தற்போது தர்மபுரி தொகுதியில் 8 வாக்குச்சாவடிகள், தேனி தொகுதியில் 2 வாக்குச்சாவடி, கடலூர், ஈரோடு மற்றும் திருவள்ளூரில் தலா ஒரு வாக்குச்சாவடி என 13 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு பிரப்பிதுள்ளது. மீதம் உள்ள வாக்குச்சாவடிகள் குறித்து தற்போதைக்கு தகவல்கள் வெளியாகவில்லை, விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுவாக்குப்பதிவு ஆனது வருகிற 19-ஆம் தேதி நடைபெறுமென ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுமெனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே மறு வாக்குப்பதிவவை, கருத்தில் கொண்டே தேனி, ஈரோடு உள்ளிட்ட இடங்களுக்கு வாக்குப் பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ கூறியுள்ளார். தேனிக்கு வாக்கு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது தொடர்பாக திமுக-வுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இதே போன்று புதுச்சேரி தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த தொகுதிக்கு உட்பட்ட காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 10-வது எண் வாக்குச்சாவடியில் வரும் 12-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.