12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், மொழிப்பாடங்களை தவிர மற்ற பாடங்களுக்கான தேர்வு நேரம் 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது!
தமிழக பள்ளிகளில் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு காலை 10 மணியளவில் துவங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைப்பெறும். இந்நிலையில் இந்த ஆண்டு நடைப்பெறும் பொதுத்தேர்வின் போது மொழிப்பாடங்களை தவிர மற்ற பாடங்களுக்கான தேர்வு நேரம் 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, மொழிப்பாடங்களை தவிர மற்ற பாடங்களுக்கு தேர்வு காலை 10 மணியளவில் துவங்கி, பிற்பகள் 12.45 மணியளவில் முடிவடையும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 1-ஆம் நாள் துவங்குகிறது. புதிய அறிவிப்பின் படி இந்த பொதுத்தேர்வில் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், உயிரியல், வரலாறு, இயற்பியல். வணிகக் கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான நேரம் மாற்றம் செய்யப்படும்.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மொத்தம் 1200 மதிப்பெண்களாக இருந்த தேர்வு நடைமுறை கடந்த ஆண்டு முதல் 600 மதிப்பெண்களாக (6 பாடத்திற்கு தலா 100 மதிப்பெண்கள்) குறைக்கப்பட்டது. அதேவேலையில் மறுதேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு பழைய நடைமுறை பொருந்தும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது பொதுத்தேர்வு நேரத்திலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.