முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொள்கைப்படி 10% இட ஒதுக்கீட்டில் முடிவு செய்யப்படும் என துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்!
பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதிக்க சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக அரசின் தலைமை செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கள், உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன், திமுக சார்பில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பொன்முடி, திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காங்கிரஸ் சார்பில் கோபண்ணா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மதிமுக சார்பில் மல்லை சத்யா உள்பட 21 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடை அமல்படுத்தினால் தமிழகத்திற்கு கூடுதலாக ஆயிரம் மருத்துவபடிப்பு இடங்கள் கிடைக்கும் என குறிப்பிட்டார்.
துணை முதல்வரின் இந்த உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவிக்கையில்., பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கும், சமூக நீதிக்கும் ஏதிரானது. நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஏற்கனவே ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த அனுமதிக்க கூடாது என முறையிட்டார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற மற்ற கட்சிகளின் தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 10% இட ஒதுக்கீடு குறித்து பேசுகையில், 21 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்றும், அந்த கட்சித்தலைவர்கள் ஒவ்வொரு வரும் நல்ல கருத்துக்களை கூறியதாக தெரிவித்தார். ஜெயலலிதா கொள்கையின் படி நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து, நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும், அதே சமயம் ஜெயலலிதா கொண்டு வந்த 69% இட ஒதுக்கீட்டிற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில், அரசு நல்ல முடிவை எடுக்கும் என குறிப்பிட்டார்.