முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவினை அடுத்து, தற்போது திமுக-வின் தலைவருக்கான தேர்தல் நாளை நடத்தப்படவுள்ளது. அதற்க்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 26 ஆம் நாள் மாலை 4 மணிக்குள் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனால் தற்போது திமுகவின் செயல் தலைவராக இருக்கும் மு.க. ஸ்டாலின் நேற்று திமுக மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல திமுகவின் பொருளாளர் பதிவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி வேட்புமனுவை பெற்றுக்கொண்டார்.
இவர்கள் இருவரையும் எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். இதுக்குறித்து நாளை நடைபெறும் திமுக செயற்குழு கூட்டத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
திமுக வரலாற்றில், அதன் இரண்டாவது தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வாகி உள்ளார். இதற்கு முன்பு கருணாநிதி மட்டும் அந்த பதவியை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வாகி உள்ளார் என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் மறைந்த கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரி, திமுகவில் தன்னை சேர்க்க மறுத்தால், கடும் விளைவிகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். அவருக்கு பக்கபலமாக அவரது (மு.க. அழகிரி) மகன் தயா அழகிரி "திமுக-வின் நிரந்தர தலைவர் கருணாநிதி மட்டுமே" என மு.க. ஸ்டாலினுக்கு எதிராக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக தனது ஆதரவாளர்களை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை குறித்து ஆலோசனை செய்து வருகிறார் அழகிரி. அடுத்த மாதம் செப்டம்பர் 5 ஆம் நாள் மிகப்பெரிய பேரணி நடத்தி ஆதங்கத்தை வெளிப்படுத்துவேன் எனவும் கூறியுள்ளார்.