#MeToo மூலம் சகதி வீசப்படுகிறது - பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை

மீடூ என்கிற பெயரில் யார் மீதும் யார் வேண்டுமானாலும் சகதி வீசலாம் என்றாகி விட்டது என மத்திய இணை பொன்.ராதாகிருஷ்ணன் வேதனையை தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 15, 2018, 09:36 PM IST
#MeToo மூலம் சகதி வீசப்படுகிறது - பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை title=

கடந்த சில தினங்களாக #MeToo என்ற ஹேஷ்டேக் இந்தியாவில் பிரபலம் ஆகி வருகிறது. இந்த ஹேஷ்டேக் பெண்கள் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து பகிர்ந்து வருகின்றனர். #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. 

இந்த ஹேஷ்டேக் மூலம் சினிமாத் துறை, ஆன்மிகவாதிகள், தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என தொடர்ந்து பாலியல் புகார்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது #MeToo மூலம் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் அல்லது அவரை பிரதமர் மோடி பதவி நீக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். 

இதுக்குறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் அக்பர், இதில் தான் எவ்வித தவறான செயலிலும் ஈடுபடவில்லை. தன் மீது கூறப்படும் புகார்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. அரசியல் நோக்கம் கொண்டவை. சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார். மேலும் டில்லி பாட்டியாலா கோர்ட்டில் தன் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், இன்று இதுக்குறித்து பேசிய தமிழகத்தை சேர்ந்த மத்திய இணை பொன்.ராதாகிருஷ்ணன், #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் யார் வேண்டுமானாலும், யார் மீதும் புகாரை கூறுகிறார்கள். இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லை. இது மிகவும் தவறு. 

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் புகார்கள் கூறப்படுகின்றன என்பது தெரியவில்லை. மீடூ என்கிற பெயரில், யார் மீதோ புகாரைச் சொல்லிவிட்டுப் போவார்கள். ஆனால் அவர்கள், அந்தக் களங்கத்தையும் வலியையும் சுமந்துகொண்டு மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. அதன்பிறகு அவர் குற்றமற்றவர் என்பது நிருப்பித்த பிறகும் அவருக்கு ஏற்பட்ட களங்கமும் வேதனையும் வாழ்நாள் முழுக்க இருக்கும். இது ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை.

Trending News