விமான நிலையங்களில் நுழைய, அடையாளச்சான்றாக மொபைல் ஆதாரை பயன்படுத்தலாம் என்று விமான பாதுகாப்பு முகமை புதிய சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதேபோல், பெற்றோர்களுடன் வரும் சிறுவர்களுக்கு அடையாளச்சான்று அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.மொபைல் ஆதார் எனப்படும், எம் - ஆதார், 'ஆப்'பை, மொபைல் போனில், ஆதார் அடையாள அட்டை ஆணைய இணையதளம் மூலம், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஆப் மூலம், நம் ஆதார் தகவல்களை, தேவைப்பட்ட இடங்களில் பகிர்ந்து கொள்ள முடியும்.
இந்நிலையில் விமான போக்குவரத்து பாதுகாப்பு கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், விமான நிலைய வளாகத்தில் நுழைபவர்கள், அடையாளச்சான்றாக எம் - ஆதாரை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“விமான நிலையத்தில் நுழைவதற்குள் பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அல்லது எம்.ஆதார், பான் கார்டு,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 10 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளி பயணிகள், தங்களது மாற்றுத்திறன் அடையாள அட்டை அல்லது மருத்துவ சான்றிதழை காண்பிக்க வேண்டும். 18 வயதுக்குட்பட்டவர்கள் தங்கள் பெற்றோருடன் வரும் பட்சத்தில் அடையாளச்சான்று அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.