முறைகேடாக பணம் சேர்து வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆஸிப் அலி சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளார்!
முன்னதாக பாகிஸ்தானில் போலி வங்கி கணக்குகளை தொடங்கி அதில் பணத்தை சேர்த்து, வெளிநாட்டுக்கு அனுப்பிய முறைகேடு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி மற்றும் அவருடைய சகோதரி பர்யால் தால்பூருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து பாகிஸ்தான் நாட்டு ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையை தீவிரப்படுத்தியதற்கு இடையே ஜாமீன் கோரி இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் சர்தாரி. ஆனால் நீதிமன்றம் இதனை நிராகரித்துவிட்டது.
இதனையடுத்து சர்தாரியை ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எனினும் அவருடைய சகோதரியை இன்னும் கைது செய்யவில்லை. இதுதொடர்பாக முழுமையான விசாரணை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2008 -13 காலக்கட்டத்தில் பாகிஸ்தான் அதிபராக இருந்த ஆஸிப் அலி சர்தாரி முன்னதாக ஊழல் குற்றசாட்டில் சிக்கி சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆவர். பெனாசிர் பூட்டோவின் படுகொலைக்கு பின்னர் சர்தாரி பாகிஸ்தானின் அதிபராக பொறுப்பேற்றார்.
ஊழல் புகார், லஞ்ச குற்றச்சாட்டு என சர்தாரி மீதான குற்றச்சாட்டுகள் அதிகம் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அரசு ஆவணங்களை நகர்த்த 10% கையூட்டு கேட்பதை வழக்கமாக கொண்டிருக்கும் இவரை அரசியல் வட்டாரத்தில் Mr 10% என செல்லமாக அழைப்பதுண்டு. அரசியலில் சர்ச்சைகள் நிறைந்த தலைவராக கருதப்படும் இவர் 1900 மற்றும் 2000 காலக்கட்டங்களில் ஊழல் குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்தது குறிப்பிடத்தக்கது.