Squirrel Peanut Enthusiast: தமிழ்நாட்டு அரசியல் சார்ந்தும் சரி, சினிமாவிலும் சரி 'அணில்' என்ற சொல் சமூக வலைதளங்களில் அதிகம் பயன்படுத்தும் சொல்லாக உள்ளது. அணில்களால் அதிக மின்தடை ஏற்படுகிறது என மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி சொன்னது சமூக வலைதளங்களில் நகைச்சுவைக்கு ஆளாக்கப்பட்டது. அதேபோல், விஜய் ரசிகர்களை நெட்டிசன்கள் 'அணில்' என்றழைப்பது தனிக்கதை.
இவை ஒருபுறம் இருக்க, அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் அந்நாட்டு அரசியலில் நிஜ அணில் ஒன்று தற்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வளர்ப்பு அணில் அரசு அதிகாரிகளால் கருணைக்கொலை செய்யப்பட்டதுதான் பிரச்னையின் தொடக்க புள்ளியாக இருக்கிறது. அந்த அணிலை ஏன் அவர்கள் கருணைக்கொலை செய்தார்கள், அணிலால் என்ன பிரச்னை, அந்த அணிலால் அரசியல் ரீதியாக என்ன சலசலப்பு உண்டாகியுள்ளது என்பதை இதில் தொடர்ந்து பார்ப்போம்.
பீனட் அணில்...
அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்தவர் மார்க் லாங்கோ. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, கார் ஏறி ஒரு தாய் அணில் உயிரிழந்து கிடந்துள்ளது. அதன் பக்கத்தில் ஒரு அணில் குஞ்சும் உயிரோடு இருந்துள்ளது. அப்போது மார்க் லாங்கோ அந்த அணில் குஞ்சை மீட்டு தன்னுடன் வளர்த்து வந்துள்ளார். அந்த அணில் குஞ்சுக்கு பீனட் (Peanut) என பெயரிட்டுள்ளார். தமிழில் வேர்கடலை... ஆரம்பத்தில் இந்த அணில் குஞ்சுக்கு பீடிங் பாட்டில் மூலம் பால் கொடுத்துள்ளார். தொடக்கத்தில் அவர் காட்டுப் பகுதியில் விட்டாலும் கூட மீண்டும் மார்க்கின் வீட்டிற்கு பீனட் திரும்ப திரும்ப வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த அணில் மார்க் லாங்கோ உடனே இருந்துவிட்டது.
குறிப்பாக, இந்த பீனட் அணில் உலகம் முழுவதும் பேமஸ். ஆம், நம்மூரில் ரீல்ஸ் போட்டு இன்ஸ்டாகிராம் பிரபலமாக உருவெடுத்த ஆயிரக்கணக்கானோர் போன்று, இந்த அணிலின் வீடியோ இன்ஸ்டாகிராமில் பேமஸாம்... @peanut_the_squirrel12 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அணிலின் வீடியோவும், போட்டோவும் நெட்டிசன்களால் கொண்டாடப்படும் ஒன்றாக உள்ளது. அதிலும் டிரெஸ் போட்டு அந்த அணில் செய்யும் சேட்டைத்தனமான வீடியோக்கள் உலகளவில் வைரல் என கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி அந்த பக்கத்திற்கு 6 லட்சத்திற்கும் மேலான ஃபாலோயர்கள் இருக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு முன் 5.5 லட்சம் ஃபாலோயர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
கருணைக்கொலை
இந்த அணில் குறித்து சேமங் கவுண்டி சுகாதாரத்துறையிடமும், நியூயார்க் மாகாணத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதனால், அவரது வீட்டில் அக். 30ஆம் தேதி சோதனை செய்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை அந்த பீனட் அணில் உடன் ரக்கூன் என்ற மற்றொரு விலங்கும் மனிதர்களுடன் குடியிருப்பில் வசித்து வந்தது என்றும் இதனால், அங்குள்ளவர்களுக்கு ரேபீஸ் நோய் தாக்கும் அபாயம் எழுந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. உடனே அந்த இரண்டு விலங்கையும் அங்கே இருந்து பறிமுதல் செய்து அதிகாரிகள் தங்கள் இடத்திற்கு கொண்டு சென்றனர். விலங்குகளை இத்தனை நாள்களாக பார்த்து வந்த மார்க் லாங்கோ சுற்றுச்சூழல் துறையிடம் தகவல் அளித்தவர்களை சுயநலவாதிகள் என சாடினார்.
மேலும், அந்த விலங்குகளுடன் பரிட்சயப்பட்டிருந்தால் உடனே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். தொடர்ந்து, மனிதர்களுக்கு நோய் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் அந்த அணில் அரசு அதிகாரிகளால் கருணைக்கொலை செய்யப்பட்டது. இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அரசு அதிகாரிகள் மீது கடுமையாக சாடி வருகின்றனர். அந்த விலங்கை கொல்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது என கேள்வி எழுப்புகின்றனர்.
எலான் மஸ்க் பதிவுகள்
அதிலும் அமெரிக்காவின் கோடீஸ்வரர்களில் ஒருவரும், டெஸ்லா சிஇஓவுமான எலான் மஸ்க் தற்போது இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவரது X பதிவில்,"அதிபர் டொனால்ட் டிரம்ப் அணிகளை நிச்சயம் காப்பாற்றுவார்" என பீனட் அணிலுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார். மேலும் மற்றொரு பயனரின் பதிவுக்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க்,"அறிவற்ற மற்றும் இதயமற்ற கொல்லும் இயந்திரமாக அரசு உள்ளது" என பதிவிட்டுள்ளார்.
கமலா ஹாரிஸிற்கு பின்னடைவு?
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குபதிவு நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இதில் எலான் மஸ்க் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். தற்போது இந்த அணில் கருணைக்கொலை சம்பவம் கமலா ஹாரிஸ் பிரச்சாரத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | உலகில் இப்படியும் ஒரு அதிசயம் உள்ளதா? மிரளவைக்கும் கல்வெட்டுகள் !
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ