ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டத்திற்கு பின்னால் பாஜக-வின் மிகப்பெரிய சதிதிட்டம் உள்ளது என மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்!
பாராளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும், ‘ஒரு நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் கடந்த வாரம் அனைத்துக்கட்சி கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
நாடாளுமன்றத்திற்கும், எல்லா மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம். ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துகிறபோது பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என ஆளும் பாஜக நம்புகின்றது.
குறிப்பாக., ‘அடிக்கடி தேர்தலை சந்திப்பதால் ஏற்படும் பண இழப்பு தவிர்க்கப்படுகிறது. அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்களை அவ்வப்போது தேர்தல் பணிக்கு அமர்த்தும் நிலையை குறைத்துக்கொள்ள முடியும்.’
‘நேரம் வீணாவது தவிர்க்கப்பட்டு விடும். நாட்டிலும், எல்லையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிற பாதுகாப்பு படையினரை தேர்தல் பணிகளில் அடிக்கடி ஈடுபடுத்தும் நிலை ஏற்படாது. அடிக்கடி தேர்தல் வருகிறபோது, நடத்தை விதிகளை அமல்படுத்துவதால் புதிய வளர்ச்சித்திட்டங்களை அறிவிப்பதிலும், வளர்ச்சிப்பணிகளை தொடங்குவதிலும் தடங்கல்கள் ஏற்படும்.’
எனினும் ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம் என மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் அனைத்துக்கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.
அரசியல் சாசன சட்டத்தை திருத்த வேண்டிய தேவை எழும். இது தொடர்பாக விவாதிப்பதற்காக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தை திமுக , காங்கிரஸ், தெலுங்கு தேசம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் புறக்கணித்தனர்.
இந்நிலையில், ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டத்திற்கு பின்னால் பாஜக-வின் மிகப்பெரிய சதிதிட்டம் உள்ளது என மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். “ஒரே நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடியை செய்து நாடாளுமன்றத் தேர்தலிலும், மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் வெற்றிப்பெறுவதுதான் பாஜக-வின் சதிதிட்டம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.