குஜராத் மாநிலத்தில் துணை முதல்-மந்திரியாக இருப்பவர் நிதின்படேல். இவரது மகன் ஜெய்மின் படேல். இன்று அதிகாலையில் ஜெய்மின் படேல் விமான நிலையத்துக்கு வந்த போது அவர் கடுமையான குடிபோதையில் காணப்பட்டார். அவருடன் அவர் மனைவி ஜலக், மகள் வைஷ்ணவியும் கூட இருந்தனர்.
தன் குடும்பத்துடன் கோடைகால விடுமுறை சுற்றுப்பயணம் செல்ல அவர் ‘‘கத்தார் ஏர்வேஸ்’’ விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். விமான நிலையத்துக்கு வந்த போது அவர் கடுமையான குடிபோதையில்
காணப்பட்டார். அவரால் நிற்க கூட முடியவில்லை. தள்ளாடியபடி இருந்ததால் அவரை வீல்சேரில் உட்கார வைத்து விமான நிலையத்துக்குள் அழைத்து சென்றனர்.
அப்பொழுது சோதனையின் போது அவர் குடிபோதையில் இருந்ததால் விமானத்துக்குள் ஏற்ற இயலாது என்று அதிகாரிகள் அறிவித்தனர். உடனே அவர் அதிகாரிகளுடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஜெய்மின் பட்டேல் மது அருந்தி இருப்பதால், அவரை விமானத்தில் செல்ல அனுமதிக்க முடியாது என அவரை விமான அதிகாரிகள் திருப்பி அனுப்பினார்கள். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்த விவகாரம் குஜராத் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி துணை முதல்-மந்திரி நிதீன் படேல் கூறுகையில், ‘‘எனது மகன் உடல் நலம் இல்லாமல் இருந்தார். ஆனால் அவரை மது போதையில் இருந்ததாக தவறான தகவலை வெளியிட்டு விட்டனர். எனது புகழை கெடுப்பதற்காக சிலர் திட்டமிட்டு இதை அரங்கேற்றி உள்ளனர்’’ என்றார்.
குஜராத்தில் முழு மதுவிலக்கு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.