மசூத் அசார் பெயரை சர்வதேசப் பயங்கரவாதப் பட்டியலில் இணைக்க நான்காவது முறையாக சீன முட்டுக்கட்டை போட்டுள்ளது. சீனாவின் இந்த முடிவு ஏமாற்றமளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
2001-ஆம் ஆண்டு நடைப்பெற்ற இந்திய பாராளுமன்ற தாக்குதல் முதல் சமீபத்திய நிகழ்த்தப்பட்ட புல்வாமா தாக்குதல் வரையில் இந்தியாவில் நடைப்பெற்ற பல்வேறு பயங்கரவாத தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் பெருப்பேற்றுள்ளது.
இந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் என கூறப்படுகிறது. இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதல் எல்லாவற்றுக்கும் மூளையாக செயல்பட்ட மசூத் அசார் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட 10 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மசூத் அசார் பெயரை ஐ.நா.வின் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கும் தீர்மானத்தில் மார்ச் 13-ஆம் தேதிக்குள் சர்வதேச நாடுகள் கருத்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த தீர்மானத்தின் மீது ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் எந்த கருத்தையும் சீனா தெரிவிக்கவில்லை.
இதனால் சீனாவின் முடிவு இந்தியாவை அதிருப்தியடைய வைத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், சீனாவின் முடிவு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள பயங்கரவாத அமைப்பின் தலைவரை சர்வதேச பட்டியலில் சேர்க்க சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகளை சீனா தடுத்துள்ளது என்றும், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கான முயற்சிகளை இந்தியா தொடர்ந்து எடுக்கும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மசூத் அசாரின் பெயரை தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் வைக்க ஏற்கனவே 3 முறை இந்தியா தீர்மானம் கொண்டுவந்தது. இந்தியா தீர்மானம் கொண்டு வந்தபோதெல்லாம் சீனா தடுத்து வந்தது. தற்போது 4-வது முறையாக மசூத் அசார் மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டு முட்டுக்கட்டை போட்டுள்ளது.