National Latest News Updates: 60 உறுப்பினர்கள் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் பாஜகவுக்கு ஏற்கெனவே தனிப்பெரும்பான்மை உள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு தற்போது ஒரே ஒரு எம்எல்ஏ மட்டுமே இருப்பதால், அவர்கள் ஆதரவை வாபஸ் பெற்றாலும் பாஜகவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. சில மாதங்களுக்கு முன்பு 6 உறுப்பினர்களை கொண்ட தேசிய மக்கள் கட்சியும் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றிருந்தது தற்போது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூரில் தற்போது முதலமைச்சர் பைரன் சிங் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. பீகாரிலும், மத்தியிலும் பாஜகவுக்கு ஆதரவுடன் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம், மணிப்பூரில் பாஜகவுக்கான ஆதரவை வாபஸ் பெற்றிருப்பது பாஜகவுக்கு பெரிய எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. மணிப்பூர் ஆட்சிக்கு இதனால் எவ்வித பாதிப்பும் இல்லையென்றாலும் பாஜக இதனை சற்று கவனமாகவே கையாள நினைக்கும்.
2022ஆம் ஆண்டு மணிப்பூரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 6 பேர் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பொறுப்பேற்றனர். அதன்பின்னர், அதில் 5 பேர் பாஜகவுக்கு கட்சித் தாவினர். தற்போது பாஜகவுக்கு 37 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும், நாகா மக்கள் முன்னணி கட்சியின் 5 எம்எல்ஏக்கள், மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் ஆகியோரின் ஆதரவு இருப்பதால் மணிப்பூரில் பாஜக அசுர பலத்துடன் இருக்கிறது.
இந்நிலையில், ஒரே ஒரு எம்எல்ஏ-வை கொண்ட ஐக்கிய ஜனதா தளம் தனது ஆதரவை திரும்பப் பெறுவதன் மூலம் எதிர்ப்பை பதிவு செய்ய முனைப்பு காட்டியது தெரிகிறது. இதுகுறித்து பீகார் ஆளுநர் அஜய் குமார் பல்லாவுக்கு மணிப்பூரின் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் கிஷ் பைரன் சிங் எழுதிய கடிதத்தில்,"2022இல் நடைபெற்ற மணிப்பூர் மாநில சட்டமன்றத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட ஆறு வேட்பாளர்கள் வெற்றி பெறப்பட்டனர்.
சில மாதங்களுக்குப் பிறகு, ஐக்கிய ஜனதா தளத்தின் ஐந்து எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு கட்சித் தாவினர். இந்திய அரசியலமைப்பின் 10வது அட்டவணையில் உள்ள கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ், ஐந்து எம்எல்ஏக்கள் மீதான விசாரணை சபாநாயகர் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது. ஐக்கிய ஜனதா தளம் இந்திய கூட்டணியின் ஒரு பகுதியாக மாறிய பிறகு, பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்கான ஆதரவை ஐக்கிய ஜனதா தளம் திரும்பப் பெறுகிறது.
இதுகுறித்து ஆளுநர், முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், இதனால் மணிப்பூரில் ஐக்கிய ஜனதா தளத்தின் ஒரே எம்எல்ஏவான முகமது அப்துல் நசீர், கடைசி சட்டமன்ற கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சி வரிசையில் அமரவைக்கப்பட்டார்" என அதில் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், பாஜகவுக்கான ஆதரவை ஐக்கிய ஜனதா தளம் திரும்பப் பெற்றது உறுதியாகிறது.
காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி அமைய முக்கிய பங்கு வகித்தவர் நிதிஷ் குமார். ஆனால், மக்களவை தேர்தல் நெருங்கிய சமயத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சென்றார். மேலும், பீகாரிலும் காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜக உடன் இணைந்து அங்கு ஆட்சியமைத்தது.
மக்களவை தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளை வென்றது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காததால், ஐக்கிய ஜனதா தளம் - (12 இடங்கள்) மற்றும் தெலுங்கு தேசம் கட்சி (16 இடங்கள்) ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதரவுடன்தான் பாஜக மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்திருக்கிறது. ஒருவேளை, மீண்டும் பாஜகவுடன் நிதிஷ் குமாருக்கு அதிருப்தி ஏற்பட்டால் மத்தியிலும் அரசியல் காட்சிகள் மாறலாம் என்றும் அதற்கு மணிப்பூர் ஒரு தொடக்கப் புள்ளியாக கூட இருக்கலாம் என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ