மேற்குவங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, அம்மாநிலத்தில் உள்ள நான்கு முக்கிய கட்சிகளுடன் இன்று ஆலோசனை!!
மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமூல் தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதல், வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து நான்கு அரசியல் கட்சிகளுடன் ஆளுநர் கேசரிநாத் திரிபாதி இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின்போது தொடங்கிய வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நீடிப்பதால் அவற்றைத் தடுப்பதற்கும் அமைதியை ஏற்படுத்தவும் இக்கூட்டம் உதவும் என்று ஆளுநர் மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு ஏற்கனவே ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார்.
மக்களவைத் தேர்தலின் போது மேற்குவங்கத்தில், பா.ஜ.க - திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட கடும் மோதல், பல முறை வன்முறையாக வெடித்தது. இந்நிலையில், தேர்தல் தொடர்பான முன்விரோதத்தால் 4 பேர் கொல்லப்பட்டதால் மேற்கு வங்கத்தில் பதற்றம் நிலவுகிறது. இந்த வன்முறைச் சம்பவத்துக்கு மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.