இந்தியாவில் பிறந்து உலகெங்கிலும் தங்கள் புகழையும் நாட்டின் பெருமையையும் பரப்பியவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அதே நேரத்தில் இந்திய மண்ணில் பிறந்து அயல் நாட்டுக்கு சென்று அங்கு இந்தியாவின் புகழையும் பெயரையும் நிலைநாட்டியவர்களும் ஏராளமானோர் உள்ளனர்.
இவர்கள் தங்கள் அயராத உழைப்பாலும் திறமையாலும் அந்த நாட்டு மக்களையும் பின்னுக்குத் தள்ளி உயர் பதவிகளையும் நன்மதிப்பையும் பெற்று வருகிறார்கள். இப்படிப்பட்டவர்களில் பல நாடுகளில் பல சாதனைகளை படைத்து இந்தியாவின் பெயரை ஒளிரச்செய்தவர்களின் பட்டியல் மிக நீண்டது.
இந்திரா நூயி: உலகை திரும்பி பார்க்க வைத்த ஒரு தமிழ் பெண்
இந்தியாவின் புகழை உலகில் பரப்பியவர்களில், இரும்பாலான உறுதியும், இடி தாங்கும் வலிமையும், இளகிய மனமும் கொண்டு உலகளவில் வர்த்தக உலகில் தனக்கென தனி இடம் பிடித்து, தரணி போற்றும் தமிழ் பெண்ணாய் வலம் வரும் இந்திரா நூயி பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்திரா நூயி பிறப்பு, வளர்ப்பு: தமிழகம் பெற்றெடுத்த தவப்புதல்வி
இந்திரா நூயி இந்தியாவில், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 1955 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் நாள் பிறந்தார். சென்னை தி. நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற அவர், மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியிலும் பின்னர் கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்திலும் (எம்பிஏ), அதன் பின்னர் ஏல் பல்கலைக்கழகத்திலும் (எம்ஸ்) கல்வி பயின்றார்.
இந்திரா நூயி: துவங்கியது தொழில் வாழ்க்கை
இந்தியாவில் தனது தொழில் வாழ்க்கையை தொடங்கிய இந்திரா, ஜான்சன் அண்ட் ஜான்சன் மற்றும் டெக்ஸ்ட்டைல் ஃபர்ம் பியர்ட்செல் லிமிடட் நிறுவனங்களில் பிராடெக் மேலாளராக பணிபுரிந்தார். பின்னர் பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தில் செயலுத்தி ஆலோசகராக பணியில் சேர்ந்த இந்திரா, மோடோரோலாவில் உயர் பதவியை வகித்தார்.
பெப்சியில் வெற்றிக்கொடி நாட்டிய இந்திரா நூயி
இந்திரா நூயி, 1994 ஆம் ஆண்டு பெப்சிகோ நிறுவனத்தில் சேர்ந்தார். தனது திறமையாலும், அயராத உழைப்பாலும் நிறுவனத்தின் பல வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் காரணமானார். அவரது திறமையும், தனித்துவமும் கவனிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு நிறுவனத்தின் சிஇஓ ஆக பதவி உயர்வு பெற்றார். அந்த வேளையில், பெப்சிகோ நிறுவனத்தின் 44 ஆண்டுகால வரலாற்ரில் அவர் நிறுவனத்தின் ஐந்தாவது சிஇஓ ஆனார். இந்த பதவியை பெறுவதற்கு முன், அவர் பெப்சி நிறுவனத்தில் பல முக்கிய பதவிகளை வகித்தார்.
செயலுத்தி ரீதியாகவும், வணிக முன்முயற்சி ரீதியாகவும் இந்திரா பல புதிய உத்திகளை முயன்று பார்த்து அதில் வெற்றியும் கண்டார். பல புகழ்பெற்ற, நலிந்த நிறுவனங்களை கையகப்படுத்தும் செயலுத்தி அவருக்கும், பெப்சி நிறுவனத்துக்கும் பல வெற்றிகளை தந்தது. அவரது தலைமையில் நிறுவனத்தின் சர்வதேச விரிவாக்கத்தில் குறிப்பிடத்தகக் வகையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன.
இந்திரா நூயிக்கு கிடைத்த பாராட்டுகள்
2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் 50 குறிப்பிடத்தக்க பெண்களின் பட்டியலில் இந்திரா நூயியின் பெயரும் இடம் பெற்றது. மேலும் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் டைம்ஸின் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் அவர் இடம் பெற்றார்.
2008 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் அவரை மூன்றாவது மிகவும் சக்திவாய்ந்த பெண்மணியாக அறிவித்தது. 2014 இல், ஃபோர்ப்ஸில் அவருக்கு 13 ஆவது இடம் கிடைத்தது. பார்ச்சூன் 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டு பட்டியலில் வணிகத்தில் மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார்.
7 அக்டோபர் 2010 இல், ஃபார்ச்சூன் பத்திரிகை அவரை உலகின் 6 வது சக்திவாய்ந்த பெண்மணியாக மதிப்பிட்டது. பார்ச்சூனின் 2015 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில், இந்திரா இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
14 டிசம்பர் 2013 அன்று, குடியரசு தலைவர் மாளிகையில் அப்போதைய இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
மேலும் படிக்க | லாகூரில் பிறந்து சென்னையில் படித்த என்.ஆர்.ஐ சுப்பிரமணியன் சந்திரசேகர்
2018 ஆம் ஆண்டில், சிஇஓ வர்ல்ட் இதழால் இந்திரா நூயி "உலகின் சிறந்த சிஇஓ-களில்" ஒருவராக பெயரிடப்பட்டார்.
இவை இந்திராவுக்கு கிடைத்த மரியாதைகளில் சிலவே. இன்னும் பல விருதுகளும் மரியாதைகளும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளன.
இந்திரா நூயி 2018 ஆம் ஆண்டு பெப்சிகோவின் சிஇஓ பதவியில் இருந்து விலகினார்.
இந்திரா நூயி: எடுத்துக்காட்டாய் ஒரு வாழ்க்கை
- பெண்கள் எப்போதும், பெண் என்பதை காரணம் காட்டி வேலையின் தரத்தில் சமரசம் செய்துகொள்ளக்கூடாது என்றும் பெண்கள் அனைத்து பணிகளுக்கும் தகுதியானவர்கள் என்பதை நிரூபிக்க ஆண்களை விட அதிகமாக உழைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இந்திரா நூயி அயராத உழைப்பு மற்றும் உறுதிக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார்.
- புதுமையான சிந்தனைகள், அறிவாளித்தனமான முயற்சிகள், துணிகர செயலுத்திகள் ஆகியவற்றின் மொத்த உருவமாய் திகழ்ந்து உலகின் மிகச்சிறந்த சிஇஓ-களில் ஒருவராக திகழ்ந்தார்.
- அயல் நாட்டுக்கு சென்று, உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான பெப்சிகோவில் பணிபுரிந்து, தனது அறிவாற்றலாலும், திறமையாலும் மிகப்பெரிய வணிக ஜாம்பவான்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டினார்.
- இவரது தலைமையின் கீழ் பெப்சிகோ பன்மடங்கு வளர்ச்சியை பெற்றது. இலக்கை நிர்ணயித்து, அந்த இலக்கு ஒன்றே குறி என செயல்படும் இலட்சியவாதி அவர்.
இந்தியா பெற்றெடுத்த தவப்புதல்வி இந்திரா நூயி, ஒரு பெண் முடிவெடுத்தால், எதையும் செய்து முடிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெண் புலி.
அயலகத்தில் தன் ஆளுமையால் பல அற்புதங்களை நிகழ்த்தி இன்றும் பல பெண்களுக்கு, உறுதியான உந்துதலாய், எழுச்சியூட்டும் எடுத்துக்காட்டாய், ஊக்குவிக்கும் உதாரணமாய் ஜொலிப்பவர் இந்திரா நூயி.
மேலும் படிக்க | எலோன் மஸ்க் வசம் செல்லும் ட்விட்டர்; மஸ்க் பதிவு செய்த முதல் ட்வீட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR