இந்து மதத்தில் முக்கியமான பெளர்ணமிகளில் ஒன்று மாசி மாத மக நட்சத்திரத்தன்று வரும் முழுநிலவு நாள் ஆகும். மத மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள இந்த நன்னாள், இந்த ஆண்டு, இது பிப்ரவரி 24, 2024 சனிக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. விஷ்ணு மற்றும் சந்திரனுக்கு உரிய நாளான இன்று, சைவ மதத்திலும் முக்கியமான நாளாகும்.
மாதந்தோறும் பௌர்ணமி வந்தாலும், மாசி மாத பெளர்ணமி மிகவும் விஷேசமானது.
பிப்ரவரி 23, 2024 அன்று பிற்பகல் 03:33 மணிக்குத் தொடங்கும் பெளர்ணமி திதி அடுத்த நாள் அதாவது பிப்ரவரி 24, 2024 அன்று மாலை 05:49க்கு முடிகிறது. பிப்ரவரி 24, 2024 அன்று 03:26 PM முதல் 04:51 PM வரை சிறப்பு பூஜைகள் செய்வது சிறப்பு என்று பஞ்சாங்க கணிப்புகள் கூறுகின்றன. இந்த புனித நாளில் நீர்நிலைகளில் அதிலும் குறிப்பாக கங்கை நதியில் புனித நீராடுவதும், அன்னதானம் செய்வதும் வாழ்க்கையில் மேன்மையைக் கொடுக்கும்.
மாசி மாதத்தில் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார். சிம்மராசிக்கு உரிய மக நட்சத்திரத்தன்று சந்திரன் சிம்மராசியில் சஞ்சரிப்பார். மாசி மகம், தமிழ்நாட்டில் கும்பகோணத்திலும், உத்தரப்பிரதேசத்தில் அலகாபாத்திலும் மிக்க சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.
மாசி மகத்தின் சிறப்பு
மாசி மகத்தன்று தான் திருமால், மகாவிஷ்ணு மற்றும் திருமாலின் அவதாரங்கள் வணங்கப்படுவது வழக்கம். சைவ மரபின்படி, சிவபெருமான், வருணனுக்கு சாபவிமோசனம் அளித்த நாள் மாசி மகம் தான். அதனால் தான், அன்று புண்ணிய நதிகளில் நீராடினால், பாவங்கள் அனைத்தும் தொலைந்துபோகும் என்றும் ஐதீகம் உண்டு. கும்பகோணத்தில் மாசி மகாமகக் குளம் என்றே ஒன்று உண்டு. பல்வேறு இடங்களில் இருந்தும், மாசி மகத்தன்று மக்கள் இங்கு வந்து நீராடி பாவம் நீங்கப் பெறுவார்கள்.
அதேபோல, மாசி மாதம் மக நட்சத்திர நாளன்று தான், தட்சனின் மகள் தாட்சாயணியாக உமையாள் அவதரித்தார் என்பதால் சக்தி வழிபாட்டிற்கு உரிய நாளாகவும் மாசி மகம் விளங்குகிறது.
மேலும் படிக்க | திருமண தடை நீக்கி மாங்கல்ய வரம் தரும் வழிபாடுகள்! வழிபட்டால் கைமேல் மாங்கல்ய பலன்!
தந்தை, தாய், மாமன் என மூவருக்கு மட்டுமா மாசி மகம் சொந்தம், எனக்கும் தான் என்று உணர்த்த, முருகனும் இந்த நாளில் ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார்.
பிரணவ மந்திர உபதேசம்
மகன் முருகன் உபதேசித்த பிரணவ மந்திரத்தின் உட்பொருளை சிவன் கேட்டு அறிந்தார். முனிவரின் சாபத்தால் சிவன் இழந்திருந்த மந்திர சக்திகள் அனைத்தையும் பெற்ற பரமேஸ்வரன்,‘தந்தைக்கு உபதேசம் செய்த ஸ்வாமிநாதன்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜெகம் ஆள்வார்கள் என்று ஒரு பழமொழியே உண்டு. மிகுந்த சக்தியுடன் திறமைசாலிகளாக விளங்கும் இவர்கள், கம்பீரமானவர்கள் என்றும் கருதப்படுகின்றனர். இதற்கு உதாரணமாக, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை சொல்வார்கள்.
குந்திதேவிக்கு, சூரியன் மூலமாக கர்ணன் பிறந்தார். திருமணமாவதற்கு முன் கர்ணனைப் பெற்ற குந்திதேவி, குழந்தையை பிரிந்தாலும், அந்தப் பாவத்தின் உறுத்தல் தாயின் மனதில் வடுவாக தங்கிவிட்டது. அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா என்ற தேடலில் இருந்தபோது, மாசி மகம் அன்று ஏழு கடலில் நீராடினால் பாவம் விலகும் என்று முனிவர் ஒருவர் ஆலோசனை சொன்னார்.
ஒரே நாளில் எப்படி ஏழு கடல்களில் நீராட முடியும்? என்று நினைத்து, குந்தி இறைவனை வேண்டினார். அப்போது, திருநல்லூர் கோயில் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது. அதில் ஏழு கடல் தீர்த்தங்களை வரவழைக்கின்றேன். அந்தத் தீர்த்தத்தை ஏழு கடலாக நினைத்து மாசி மகம் அன்று நீராடு! என்று அசரீரி கேட்டது.
கடவுளின் கருணையால், குந்தியும் மாசி மக நாளன்று திருநல்லூர் கோவிலில் நீராடி, இறைவழிபாடு செய்து பாவ விமோசனம் பெற்றார். அந்தத் தீர்த்தமே சப்த சாகர தீர்த்தம் ஆகும். இத்திருத்தலம், தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் திருநல்லூரில் உள்ள பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ளது.
மேலும் படிக்க | பாற்கடலை கடைந்த நாளை நினைவுபடுத்தும் மாசி மாத பிரதோஷம்! பக்தியுடன் அனுசரிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ