ஐபிஎல் தொடர்கான ஏலத்தில் 25 வயதான தமிழக வீரர் டி.நடராஜன் ரூ.3 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக வாங்கப்பட்டார்.
பயிற்சியாளர் ஜெயபிரகாஷ் எனக்கு கடவுள் மாதிரி என கூறியுள்ளார்.
இதைக்குறித்து டி.நடராஜன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் கிரிக்கெட் வீரராக ஆகியிருக்காவிட்டால், தினக்கூலி வேலைக்கு சென்று கொண்டு இருந்திருப்பேன். சொந்த ஊரில் டென்னிஸ் பந்தில் விளையாடி நிறைய கோப்பைகளை வென்று இருக்கிறேன். 4-ம் டிவிசன் போட்டியில் ஆடிய போது எனது திறமையை கண்டுபிடித்து ஊக்குவித்தவர், பயிற்சியாளர் ஜெயபிரகாஷ். அவர் தான் எனது பெற்றோரிடம் பேசி என்னை சென்னையிலேயே தங்கியிருந்து விளையாட வைத்தார். நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் எல்லா பெருமையும் அவரைத் தான் சாரும். அவரு எனக்கு கடவுள் மாதிரி. நான் ஏலத்தில் எடுக்கப்பட்ட தகவலை முதலில் அவரிடம் தான் பகிர்ந்து கொண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.
வாழ்க்கை:
இவரது சொந்த ஊர் சேலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி. உடன்பிறந்தவர்கள் 4 பேர். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சேலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தினக்கூலி. தாயார் நடைபாதையில் தின்பண்டங்கள் வியாபாரம் செய்பவர். நடராஜன் தனது 20 வயது வரை டென்னிஸ் பந்தில் தான் கிரிக்கெட் விளையாடினார்.
திருப்புமுனை
அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது, தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் போட்டியாகும். கடந்த ஆண்டு டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தமிழகத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக களம் இறங்கினார். அது தான் நடராஜனை வெகுவாக அடையாளம் காட்டியது.