'உங்கப்பன் விசில கேட்டவன்' ரஜினி பாட்டை போட்டு கேக் வெட்டிய தோனி - சாக்‌ஷி செய்த திடீர் காரியம்!

MS Dhoni Birthday Celebration: 'ஜெயிலர்' பட பாடல் பின்னணியில் ஒலிக்க தோனி, பிறந்தநாளை கேக் வெட்டிய வீடியோவை அவரது மனைவி சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சாக்‌ஷி திடீரென செய்த காரியம் பலரையும் சிரிப்பில் ஆழ்த்தியது. 

Written by - Sudharsan G | Last Updated : Jul 7, 2024, 08:46 AM IST
  • தோனி அவரது 43வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
  • 2020ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
  • இன்னும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வுபெறவில்லை.
'உங்கப்பன் விசில கேட்டவன்' ரஜினி பாட்டை போட்டு கேக் வெட்டிய தோனி - சாக்‌ஷி செய்த திடீர் காரியம்! title=

MS Dhoni 43rd Birthday Cake Cutting Celebration: இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத வீரர்களின் பட்டியில் முன்னணியில் இருப்பவர் மகேந்திர சிங் தோனி. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வுபெற்று சுமார் 4 ஆண்டுகள் நெருங்கப்போகிறது. தற்போது வரை அவர் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவதால், ஐபிஎல் போட்டிகளில் அவரை காண மட்டும் ஆயிரக்கணக்கில் மக்கள் நாடு முழுவதும் மைதானங்களுக்கு படை எடுப்பதை ஏப்ரல், மே மாதங்களில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்ட தோனி, நடந்து முடிந்த 2024 சீசனின் தொடக்கத்திலேயே தனது கேப்டன்ஸி பொறுப்பை ருத்ராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்தார். பலரும் தோனி இதற்கு பின் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என கருதினாலும், இந்த சீசனில் சிஎஸ்கே பிளே ஆப் வரை கூட வராததால் நிச்சயம் தோனி அடுத்த சீசனிலும் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என அவரின் ரசிகர்கள் பலரும் இன்னும் நம்பிக்கையோடு உள்ளனர். 

விடைபெறுவாரா தோனி...?

ஆனால், அவர் அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா மாட்டாரா என்பது அவருக்கே இன்னும் தெரியாது என்பதுதான் நமக்கு உறுதியாக தெரிந்த தகவல் எனலாம். தோனி எந்த ஒரு முடிவையும் நிதானமாகவும், பொறுமையாகவும் எடுப்பவர் என்பதால் அவரின் முடிவை தெரிந்துகொள்ள நாம் இந்தாண்டு நடக்க உள்ள ஐபிஎல் மெகா ஏலம் வரை நாம் காத்திருக்க வேண்டும் எனலாம். சிஎஸ்கே மீண்டும் அவரை தக்கவைக்குமா அல்லது தோனி தனது ஸ்டைலில் திடீரென விடைபெற்றுக்கொள்வாரா என்பதை நாம் பொறுத்திருந்த பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | உச்சக்கட்ட கடுப்பில் தோனி... அடுத்த சீசனிலும் தல வருவார்...! - காரணம் இதுதான்

அப்படியிருக்க தோனி தனது ஓய்வு காலத்தில் ராஞ்சியில் விவசாயத்தை பார்த்துக்கொண்டு அவ்வப்போது மட்டுமே பொது இடங்களிலும், சமூக வலைதளங்களிலும் தலைக்காட்டுவார் எனலாம். அதுவும் அவரின் மனைவி மற்றும் மகளின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்தான் அதிகம் தோன்றுவார். அதேபோல், எப்போதும் சமூக வலைதளங்களில் சைலன்ட்டாக இருக்கும் தோனி, நீண்ட நாள் கழித்து இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரை கைப்பற்றிய போது கடந்த வாரம் ஒரு பதிவிட்டிருந்தார். அதுவும் இரண்டு, மூன்று போட்ட பதிவை டெலீட் செய்துவிட்டு அந்த பதிவை போட்டிருந்தார். 

தல தரிசனம்

தற்போதும் மும்பையில் நடைபெற்று வரும் ஆனந்த் அம்பானி - ராதிக் மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்தை முன்னிட்ட கொண்டாட்ட நிகழ்வுகளில் தனது மனைவியுடன் தோனி கலந்துகொண்டுள்ளார். இப்படி அவ்வப்போது மட்டுமே தோனியின் தரிசனம் தங்களுக்கு கிடைக்கிறது என ரசிகர்கள் குமுறுவதையும் நம்மால் அதிகம் கேட்க முடியும். ஆனால், தோனியின் தரிசனம் கிடைக்கும்போதெல்லாம் அதனை கொண்டாடி தீர்ப்பதில் ரசிகர்கள் குறை ஏதும் வைப்பதில்லை.

கேக்குகளை வெட்டிய தோனி...!

இந்நிலையில், மகேந்திர சிங் தோனி ஜூலை 7ஆம் தேதியான இன்று அவரது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்காக தோனியின் ரசிகர்கள் வாட்ஸ்அப், பேஸ்புக், X, இன்ஸ்டாகிராம் என திரும்பிய பக்கமெல்லாம் வாழ்த்து மழையை பொழிந்து வருவதையும் நீங்களே பார்த்திருப்பீர்கள். அந்த வகையில் வெறும் வாயுக்கு அவல் கிடைத்த கதையாக தோனி கேக் வெட்டிய வீடியோவும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. தோனியின் வீடியோ எப்போதும் வைரலாவது வழக்கம் தானே இதில் என்ன ஸ்பெஷல் என கேட்பதும் புரிகிறது.

தோனியும்... Hukum பாடலும்..

அது வேறொன்றுமில்லை. ஜார்க்கண்டை சேர்ந்தவராக இருந்தாலும் சென்னைக்கும், ஏன் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் மிக நெருங்கியவராகிவிட்ட தோனி இந்த முறை தனது பிறந்தநாளுக்கு கேக்குகளை (ஆம், ஒன்றில்லை பல கேக்குகள் இருந்தன, வீடியோவில் பார்க்க) வெட்டும்போது பின்னணியில் கடந்தாண்டு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் 'Hukum'பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. 

அதுவும்,"நடக்குற நடை புயலாச்சே… முடி ஒத்துகுற ஸ்டைலாச்சே… தல முதல் அடி வரை தலைவரு அலப்பற..." என தொடங்கி, "உன் அலும்ப பாத்தவன்… உங்க அப்பன் விசில கேட்டவன்… உன் மவனும் பேரனும்… ஆட்டம் போட வைப்பவன்…" என அனிருத்தும், அவரது கோரஸூம் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவில் கூட இதே Hukum பாடலுடன் தான் பதிவிடப்பட்டுள்ளது. இந்த 2024 சீசனில் முதல்முறையாக தோனி சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய போதும் இந்த பாடல்தான் மைதானம் முழுவதும் ஒலித்தது. Hukum பாடல் பின்னணியில் தோனி கொடுத்த என்ட்ரிக்கு ரசிகர்கள் வானளவு கோஷமிட்டை யாராலும் மறக்க முடியாது. இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில், சூப்பர் சுப்பு இதற்கான வரிகளை எழுதினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

சாக்‌ஷி செய்த திடீர் காரியம்

இது ஒருபுறம் இருக்க, தோனி கேக்கை வெட்டி முதலில் அவரது மனைவிக்கு ஊட்டியபின்னர், சாக்‌ஷி திடீரென நகைச்சுவைக்காக தோனியின் காலில் விழுந்து வணங்க தோனியும் நக்கலான சிரிப்புடன் வாழ்த்திய காட்சியையும் நம்மால் வீடியோவில் பார்க்க முடிகிறது. மேலும் கேக்குகளை வெட்டியபோது, பாலிவுட் நடிகர் சல்மான் கானும் உடனிருந்தார். அவர் தனது X பக்கத்தில் தோனிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். மும்பையில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் தம்பதிகளின் திருமணத்தை முன்னிட்ட கொண்டாட்டத்தில் இருக்கும் இவர்கள், அங்கு தோனியின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர்.  

மேலும் படிக்க | தோனியின் இந்த ஒரு சாதனையை யாராலும் தொட கூட முடியாது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News