ஐபிஎல் 2024 தொடரில் வியாழக்கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியை தழுவியது. 2வது தோல்வியை அந்த அணி சந்தித்திருக்கும் நிலையில், போட்டியின்போது டிஆர்எஸ் எடுக்கச் சொல்லி கேப்டன் ரிஷப் பன்டை குல்தீப் யாதவ் மிரட்டிய வீடியோ வைரலாகியுள்ளது. குல்தீப் வற்புறுத்தி ரிஷப் பன்ட் டிஆர்எஸ் எடுத்த நிலையில், அது விக்கெட்டாகவும் அமைந்தது. முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரியான் பராக் அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார்.
மேலும் படிக்க | டெல்லிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்!
ராஜஸ்தான் அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறிக் கொண்டிருந்தபோது, ரியான் பராக்குடன் 5வது விக்கெட்டுக்கு அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அஸ்வின் 19 பந்துகள் விளையாடி 29 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்சர்களும் அடங்கும். அவரின் இந்த பேட்டிங் சரிவில் இருந்த ராஜஸ்தான் அணியை மீட்க உதவியது. முதலில் ஆர்ஆர் அணி ஆமை வேகத்தில் தான் விளையாடிக் கொண்டிருந்தது. அஸ்வின், ரியான் பராக் ஜோடி சேர்ந்ததும் அந்த அணியின் ரன்வேகம் அதிகரித்தது. ஜூரல், ஹெட்மயர் ஆகியோரும் பொறுப்பாக விளையாட யாருமே கணிக்காத 185 ரன்கள் என்ற ஸ்கோரை ஆர்ஆர் அணி எடுத்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் குல்தீப், அக்சர், நோர்ட்ஜே, முகேஷ் குமார், கலீல் அகமது ஆகியோர் தலா ஒருவிக்கட் எடுத்த நிலையில், அடுத்து ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தொடரில் அந்த அணி சந்திக்கும் 2வது தோல்வியாகும். டெல்லி அணி பவுலிங்கின்போது ஒரு காமெடியான சம்பவம் நடைபெற்றது. டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் எட்டாவது ஓவரில் குல்தீப் யாதவை பந்துவீச கொண்டு வந்தார். இந்த ஓவரில் குல்தீப் யாதவின் முதல் பந்தில் ரியான் பராக் ஒரு ரன் எடுத்து ஜோஸ் பட்லரிடம் ஸ்டிரைக் கொடுத்தார். எட்டாவது ஓவரின் இரண்டாவது பந்தில், குல்தீப் யாதவுக்கு எதிராக ஜோஸ் பட்லர் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார்.
ரிவர்ஸ் ஸ்வீப் விளையாட முயற்சித்த போது ஜோஸ் பட்லர் தவறி பந்து அவரது பேடில் பட்டது. இதைத் தொடர்ந்து, குல்தீப் யாதவ், டெல்லி கேபிடல்ஸ் வீரர்கள் எல்பிடபள்யூ கேட்டு அம்பயரிடம் முறையீடு செய்தனர். ஆனால் நடுவர் அவுட் இல்லை என அறிவித்துவிட்டார். உடனே, குல்தீப் யாதவ், கேப்டன் ரிஷப் பந்தை டி.ஆர்.எஸ் எடுக்கச் சொன்னார். ரிஷப் பண்ட் டிஆர்எஸ் எடுப்பதில் நம்பிக்கை இல்லை. இதைத் தொடர்ந்து, குல்தீப் யாதவ் நேராக கேப்டன் ரிஷப் பந்திடம் சென்று அவரது கைகளைப் பிடித்து டிஆர்எஸ் எடுக்குமாறு வற்புறுத்தி கேட்டுக் கொண்டார்.
முடிவில் குல்தீப் யாதவின் முடிவு சரியானதாக மாறியது. அதாவது பட்லர் அவுட் என மூன்றாவது நடுவர் அறிவித்துவிட்டார். குல்தீப் யாதவின் புத்திசாலித்தனத்தால் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லரின் முக்கியமான விக்கெட் கிடைத்தது. டிஆர்எஸ் விக்கெட் கிடைத்ததும் குல்தீப் யாதவ் ரிஷப் பந்தின் கைகளை மீண்டும் பிடித்ததால், இருவரும் சிரிக்க தொடங்கிவிட்டனர். இந்த கியூட் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க | மும்பை அணிக்கு மேலும் பின்னடைவு! என்ன செய்ய போகிறார் ஹர்திக் பாண்டியா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ