இரண்டாவது டெஸ்டிலும் வெற்றி; தொடரை கைப்பற்றியது இந்தியா!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியினை 257 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் வென்றது இந்தியா!

Last Updated : Sep 3, 2019, 08:28 AM IST
இரண்டாவது டெஸ்டிலும் வெற்றி; தொடரை கைப்பற்றியது இந்தியா! title=

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியினை 257 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் வென்றது இந்தியா!

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடைபெற்றது.  இப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன் குவித்தது. விகாரி 111 ரன்னும், கேப்டன் விராட்கோலி 76 ரன்னும் எடுத்தனர். ஹோல்டர் 5 விக்கெட்டும், கார்ன்வால் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய மேற்கிந்தி தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 47.1 ஓவர்களில் 117 ரன்னில் சுருண்டது. ஹெட்மயர் அதிகபட்சமாக 34 ரன் எடுத்தார். பும்ரா ஹாட்ரிக் சாதனையுடன் 27 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். முகமது ‌ஷமிக்கு 2 விக்கெட்டும், ஜடேஜாவுக்கு 1 விக்கெட்டும் கிடைத்தன.

இதனையடுத்து 299 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. 57 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்து இந்தியா திணறியது. அகர்வால் 4 ரன்னிலும், ராகுல் 6 ரன்னிலும், விராட்கோலி ரன் எதுவும் எடுக்காமலும் ரோச் பந்தில் வெளியேறினார்கள். புஜாரா 27 ரன்னில் ஹோல்டர் பந்தில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டான ரகானே - விகாரி ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. விகாரி 67 பந்தில் 8 பவுண்டரியுடன் 50 ரன்னையும், ரகானே 91 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 50 ரன்னையும் தொட்டனர்.

பின்னர் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்து இருந்த போது ஆட்டத்தை ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 468 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ரகானே 109 பந்தில் 64 ரன்னும், (8 பவுண்டரி, 1 சிக்சர்), விகாரி 76 பந்தில் 53 ரன்னும் (8பவுண்டரி) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கேமர் ரோச் 3 விக்கெட்டும் ஹோல்டர் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இதைத்தொடர்ந்து 468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இந்திய அணியின் சார்பில் முகமது சமி, ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

ஆட்ட நாயகனாக ஹனுமா விஹாரி தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிபெற்ற கேப்டனான தோனியின் (27 வெற்றி) முந்தைய சாதனையை, கோலி (28 வெற்றி) முந்தினார். 

Trending News