தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் குணராமநல்லூர் அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்றுவிட்டு சிறுமி வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த விசிக நிர்வாகியும் குணராமநல்லூர் பஞ்சாயத்து 15வது வார்டு கவுன்சிலருமான வீராசாமி என்பவர் திண்பண்டம் வாங்கி தருவதாக கூறி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.
பிறகு சிறுமியிடம் தனிமையில் தவறுதலாக நடந்துள்ளார். மேலும், இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால் அவர்களை கொலை செய்துவிடுவேன் என சிறுமியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சிறுமிக்கு திடீரென வயிற்றில் வலி ஏற்பட்டதால் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர் ஸ்கேன் எடுத்துவருமாறு கூறியுள்ளார். தொடர்ந்து ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். உடனடியாக இதுபற்றி சிறுமியிடம் விசாரித்தபோது தனக்கு நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார்.
இதைத்தொடர்ந்து பெற்றோர்கள் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் குறித்து தகவல் அறிந்த விசிக பிரமுகர் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவானார். அவரை தேடி அலைந்த போலீசார் இறுதியாக வயல்வெளியில் வைத்து அவரை மடக்கிப்பிடித்தனர். அவர் சிறு குழந்தையிடம் அத்துமீறியதை அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
7 வயது சிறுமி என்றும் பாராமல் ஒரு கட்சி பிரமுகர் இதுபோன்று நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.