கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 19 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 16 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அனைவரும் கவலைக்கிடமாக இருப்பதாக அதிர்ச்சி அறிக்கை ஒன்றையும் ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ளது. இதுதவிர 100க்கும் மேற்பட்டவர்கள் விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் நேரடியாக கள்ளக்குறிச்சி கருனாபுரம் பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்தனர். அத்துடன் நிவாரணங்களையும் அறிவித்து வருகின்றனர்.
தவெக தலைவர் விஜய் புறப்பட்டார்
இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நேரடியாக கள்ளக்குறிச்சி புறப்பட்டார். அவர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்தார். அப்போது, சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்தார். காலையில் இது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்ட விஜய், கள்ளச்சாராயம் குடித்து இத்தனைப் பேர் உயிரிழந்ததற்கு அரசு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என விமர்சித்திருந்தார். இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்றும் நடிகர் விஜய் வலியுறுத்தியிருந்தார்.
தமிழக அரசு நடவடிக்கை என்ன?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருக்கிறார். ஒட்டுமொத்த காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அவர், இப்போதைக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை கொடுப்பதில் கவனம் செலுத்தவும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதேநேரத்தில், கள்ளச்சாராயம் விற்பனை குறித்த முழு விசாரணையையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு அறிக்கைகள் சமர்பிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார். ஏற்கனவே, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பல அதிரடி நடவடிக்கைகளும் வரும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ