சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணிக்கு HIV தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், ரத்த தானம் கொடுத்த இளைஞர் இன்று காலை உயிர் இழந்தார்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சைபெற்று வந்தார். சிகிச்சை பெற்று வந்த அவருக்கு ரத்தத்தில் சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறி, ரத்தம் ஏற்றும் படி மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனியார் மருத்துவமனையில் அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.
கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட ரத்தம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது, இதில் ரத்த தானம் கொடுத்த இளைஞர் குறித்த தகவல்கள் வெளியான. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த இளைஞர் தமக்கு HIV தொற்று இருப்பது தெரியாமல் ரத்த தானம் செய்ததாக கூறப்படுகிறது.
சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் முறையாக பரிசோதிக்காத நிலையில், இவரது ரத்தம் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது.
இந்த விவகாரம் கடும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய நிலையில், தமது ரத்தம் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட விவகாரத்தை அறிந்த இளைஞர், எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்ட உறவினர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைகள் கொடுக்கப்பட்ட பிறகு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தொடர் சிகிச்சையில் இருந்த அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை டீன் சண்முகசுந்தரம், எலி மருந்தின் கடுமையே இளைஞர் உயிரிழப்புக்கு காரணம் என தெரிவித்தார்.