கேப்டன் விஜயகாந்த் காலமானார்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானாதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்:
தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் கடந்த நவம்பர் மாதம் உடல் நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 24 நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். இதனிடையே இன்று அதிகாலை விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக முன்னதாக தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில், “ மருத்துவ பரிசோதனையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது” என்று குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்திற்கு முன்பு விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி அதிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#BREAKING: Veteran Actor/DMDK Leader Thiru. #Vijayakanth passed away in Chennai this morning..
He was getting treated for Corona infection in a hospital.. He was ill for sometime..
He was 71..
Liked by everyone, he was known for his generosity..
TN will miss him.. RIP! pic.twitter.com/eA2XHG2Mnf
— Ramesh Bala (@rameshlaus) December 28, 2023
கேப்டன் விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கை:
கேப்டன் விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், கடந்த 1993 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவரது ரசிகர் மன்றத்தினர் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். அவர்களில் பலர் வெற்றிபெற்றனர். இப்பின்புலத்தில் விஜயகாந்த் தானும் அரசியலில் ஈடுபடும் எண்ணங்கொண்டார். அதனை அவ்வப்பொழுது வெளியிட்டும் வந்தார்.
அதன்பின் 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். இவர் கட்சியின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார். இரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராக இருந்த ராமு வசந்தன், கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.
2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார். இத்தேர்தலில் மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சியைச் சேர்ந்த மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.
பின்னர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இரிஷிவந்தியம் தொகுதியிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவரது கட்சிக்கு எதிர்க்கட்சித் தகுதி கிடைத்தது. 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார். இவர் அணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அத்தேர்தலில் இவர் உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் இவரும், இவருடைய கூட்டணி கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தனர். இவர் போட்டியிட்ட உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில், 34,447 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
கேப்டன் விஜயகாந்தின் திரைப்பட வாழ்க்கை:
இயக்குநர் காஜா 'விஜயராஜ்' என்னும் பெயரை விஜயகாந்த் என மாற்றி வைத்தார். திரைப்படத்தில் நடிக்கும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்தார். தொடர் முயற்சிக்குப் பின்னர் 1978 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தார். இவர் இதுவரை 156 படங்களில் நடித்திருக்கிறார். 1991 ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் என்னும் படம் நூறாவது படமாக வெளிவந்து வெற்றியை ஈட்டித் தந்தது. இந்தப் படம் தான் இவருக்கு கேப்டன் என்னும் அடை மொழியைத் தந்தது.
விஜயகாந்தின் திரை பயணத்தில் சில இயக்குனர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர் அதில் எஸ்.ஏ.சந்திரசேகர் மிக முக்கியமானவர். எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் விஜயகாந்த் கூட்டணியில் பதினாறு திரைப்படங்கள் வெளியாகின. அதில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றியடைந்தன.
தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து வந்த விஜயகாந்த் ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் சின்ன கவுண்டர் திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்தார். இந்தப் படத்தின் கதையும் விஜயகாந்தின் நடிப்பும் படத்தின் காமெடியும் பெரும் வெற்றியடைந்தன. வெள்ளை சட்டை வேஷ்டி, வலித்து சிவிய முடி, நெற்றியில் திருநீறு என அவரின் கதாபாத்திரம் முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
விஜயகாந்த் 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் அவர் நினைத்துக் கொண்டாட கூடிய திரைப்படங்களில் ஒன்று ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ரமணா இந்த திரைப்படத்தில் தன்னுடைய முந்தைய திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நடித்திருந்தார்.
நடிகர் விஜயகாந்த் நடிகராக மட்டுமில்லாமல் தன்னுடைய நெருங்கிய நண்பரான இப்ராஹிம் ராவுத்தூருடன் இணைந்து திரைப்படங்களை தயாரித்துள்ளார். மேலும் விருதகிரி என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராகவும் அறிமுகமானார்.
சினிமாவில் பெரும் முயற்சிக்குப் பிறகு நுழைந்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்த் உதவி இயக்குனர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கி வந்தார். அதுமட்டுமில்லாமல் நடிகர்களின் வாழ்க்கை செழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நடிகர் சங்கத்தின் தலைவராக செயல்பட்டார். அவருடைய காலகட்டத்தில் நடிகர் சங்கத்தின் மீது இருந்த கடன் அடைக்கப்பட்டன. அதேபோல் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் பல உதவிகள் செய்தார் விஜயகாந்த்.
நடிப்பு தவிர செங்கல்பட்டு அருகே தன்னுடைய தாய் தந்தை பெயரில் ஆண்டாள் அழகர் என்ற கல்லூரி தொடங்கினார். அதில் அதிகம் மதிப்பெண் பெறும் ஏழை மாணவர்களுக்கு இலவச சீட் வழங்கி படிக்க வைத்தார். தன்னுடைய பிறந்தநாளில் ஏழைகளுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்.
நடிகர் விஜயகாந்த் தமிழக அரசின் கலைமாமணி விருது, சிறந்த நடிகருக்கான விருது, பிலிம் பேர் விருது உள்ளிட்ட விருதுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ