கடந்த சில நாட்களாக திமுக மற்றும் பாஜக இடையே உரசல்போக்கு அதிகரித்து வருகிறது. தருமபுர ஆதினம் பட்டினபிரவேசம் விவகாரம், திருவாரூர் வீதிக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரை சூட்டுவது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உள்ளிட்டவற்றிற்கு பாஜக கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. அதற்கேற்றவாறு இந்த இரண்டு சம்பவங்களிலும் திமுக அரசு பின்வாங்கிருப்பது தமிழக பாஜகவிற்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
இதனிடையே கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் இந்தி மொழி தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37 வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பேசிய அமைச்சர் பொன்முடி, நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. எனவே இந்திக்கும் எதிரானவர்கள் அல்ல. விரும்புபவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். இந்தி விருப்ப பாடமாக இருக்க வேண்டுமே தவிர கட்டாய பாடமாக இருக்கக்கூடாது. தமிழர்களுக்கு பிறமொழிக்காரர்களிடம் உரையாட ஆங்கிலமும், உள்ளூரில் தமிழும் இருக்கும்போது இந்தியை ஏன் கற்க வேண்டும்?. இந்தி படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றார்கள். ஆனால் கோவையில் பானிபூரி விற்பவர்கள் எல்லாம் யார்? அது ஒரு காலம். எந்த மொழியை கற்கவும் தயாராக உள்ளோம். மூன்றாவது மொழியாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், இந்தியை கட்டாயமாக்கக்கூடாது.
புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயார். தமிழ்நாடு கல்விக் கொள்கையை நிறுவ முதலமைச்சர் குழு அமைத்துள்ளார். அதன் அடிப்படையில் அமைக்கப்படும் தமிழ்நாடு கல்விக் கொள்கையை தான் பின்பற்றுவோம். தமிழ்நாட்டின் பிரச்சனைகளை, மக்களின் உணர்வுகளை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும். அதனை மத்திய அரசிடம் தெரியப்படுத்த வேண்டும். இதனை ஆளுநர் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் என நினைக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.
அமைச்சர் பொன்முடியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலானது. மேலும் பானி பூரி விற்பவர்கள் பற்றி கேலி செய்வதுபோல ஏற்கெனவே பல நூறு மீம்கள் இணையத்தில் இருந்த நிலையில் அவைகளும் நேற்று ட்ரெண்டாகின. இந்த நிலையில் இந்தி விவகாரம் தொடர்பாக அமைச்சர் பொன்முடிக்கு பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ''திமுகவில் இந்தி பேசும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் பானிபூரி விற்கபோகிறார்கள். அதனை நாம் பார்க்கத்தான் போகிறோம். இந்தி மொழிக்கு எதிராக இதுபோன்றதொரு கருத்து, அதுவும் உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது வெட்கக்கேடு. இதுபோன்ற நபர்களிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?. அமைச்சர் பொன்முடியின் கருத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டாரா? என்பதை தெரியப்படுத்த வேண்டும்'' என குஷ்பு காட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | இந்தி தேசிய மொழி என கூறுவது தவறாகும்: விளாசிய நடிகை மதுபாலா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR