TN Agriculture Budget 2024 Latest News: தமிழக அரசு மற்ற மாநிலங்கள் செய்ய முயலாத அருமையான பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் , வேளாண்மைக்கு என்று தனித்த நிதிநிலை அறிக்கை. இந்தியாவிற்கே வழிகாட்டியாக நிதிநிலை அறிக்கை இருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், வருகிற தமிழ்நாடு வேளாண் நிதி நிலை அறிக்கையில் (வேளாண் பட்ஜெட் 2025-2026) அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பினர் சார்பில் 50 பரிந்துரைகளை தமிழ்நாடு வேளாண் அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் வழங்கியுள்ளார்கள்.
இயற்கையைச் சிதைக்காத வேளாண் முறை
தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்றவும் நஞ்சில்லாத வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்தவும், நீடித்த விளைச்சலைத் தரும் சாகுபடி முறையை உருவாக்கவும், இயற்கையைச் சிதைக்காத வேளாண் முறையைப் பின்பற்றவும், உழவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் தரும் வகையில் வரும் நிதிநிலை அறிக்கை இருக்க வேண்டும். இதுவே நாம் நம் அடுத்த தலைமுறைக்கு அளிக்கும் சிறந்த பரிசாக இருக்கும்.
வேளாண் பட்ஜெட் 2025
இப்படியான வழிமுறைகளைப் பின்பற்றி இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை உருவாகுமானால் தமிழ்நாடு மேலும் பல உச்சங்களைத் தொடும். மதிய உணவுத் திட்டம், காலை உணவுத் திட்டம், உழவர் சந்தை என பல திட்டங்களை அறிமுகப்படுத்தி முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்த தமிழ்நாடு மீண்டும் இயற்கை வேளாண்மை மூலம் இன்னொரு உச்சத்தை தொட வேண்டும் என்கிற நோக்கத்தோடு இந்த அறிக்கை தொகுக்கப்பட்டுள்ளது.
இயற்கை வேளாண்மை முறை
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் போன்ற முன்னோடிகளைக் கொண்ட தமிழ்நாடு, நாட்டிலேயே அதிக அளவில் சிறப்பாக இயற்கை வேளாண்மை முறைகளைப் பின்பற்றும் வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆனால் சரியான கொள்கை வழிகாட்டுதல் மற்றும் வேலைத்திட்டங்கள் இல்லாததால் தடுமாறி வருகிறது.
இயற்கை வேளாண்மை நிதி அதிகரிக்க வேண்டும்
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மையை ஆதரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி தோராயமாக ரூ.21.4 கோடி மட்டுமே. இது மொத்த வேளாண் பட்ஜெட்டான ரூ.42,281.88 கோடியில் வெறும் 0.05%-க்கும் குறைவாகவே இருந்தது. ஆந்திரப் பிரதேசம், ஹிமாச்சல், கர்நாடகா போன்ற மாநிலங்கள், பாதுகாப்பான நல்ல உணவை உறுதி செய்வதற்காக, இயற்கை வேளாண்மையை படிப்படியாகத் தத்தெடுப்பதை ஆதரிப்பதற்கான நீண்டகால உத்தியை புதுமையான முறையில் முன்னெடுத்துச் சென்றுள்ளன.
இயற்கை வேளாண்மை திட்டங்கள்
இயற்கை வேளாண்மையினால் பெறக்கூடிய நல்ல ஆரோக்கியம், சுற்றுச்சூழல், வேளாண் வாழ்வாதாரம் ஆகியவற்றினை கருத்தில் கொண்டு மொத்த வேளாண் பட்ஜெட்டில் 30% இயற்கை வேளாண்மைக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். உழவர்கள் மற்றும் மகளிர் குழுக்களால் உள்ளூர் இயற்கை இடுபொருள் கடைகள் மற்றும் பாரம்பரிய (திறந்த-மகரந்தச் சேர்க்கை) விதைகளுக்கான சமூக விதை மையங்கள் அமைப்பதற்கு ஆதரவளிக்கும் திட்டம்.
இயற்கை உழவர்களுக்கு ஊக்கத்தொகை
சுற்றுச்சூழல் சேவைக்கான ஊக்கத்தொகை வழங்குதல்: இயற்கை வேளாண்மையால் உருவாகும் சுற்றுச்சூழல் நன்மைகளுக்காகவும், அதன் தற்சார்பு வேளாண் முறைகளால் சேமிக்கப்படும் அந்நிய செலாவணிக்காகவும் ஆண்டுதோறும் இயற்கை உழவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும்.
இயற்கை வேளாண் பயிற்சிகள்
மூத்த இயற்கை உழவர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழு அமைத்து, மாநிலம் தழுவிய இயற்கை வேளாண் பயிற்சிகள் அமைக்க வேண்டும். இதே குழுவினை மற்ற திட்டங்களைச் செயல்படுத்தவும் அணுகலாம்.
இயற்கை உணவு
PDS (நேரடி கொள்முதல் மையங்கள் மூலம்), ICDS, பள்ளி காலை/மதிய உணவு திட்டம், மகப்பேறு பலன்கள் போன்றவற்றிற்காக அரசு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படும் உணவில் குறைந்தது 30% இயற்கை உணவு (அனைவருக்கும் பாதுகாப்பான நஞ்சற்ற உணவை உறுதிசெய்ய) இருக்க வேண்டும்.
உழவர் பேருந்து தொடங்க வேண்டும்
உழவர் பேருந்து தொடங்குதல் உழவர்கள் தங்களுடைய விளைபொருட்களை விலையில்லா / மானிய விலையில் குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு செல்ல தனி பேருந்துகள் மற்றும் கூரியர் சேவைகள்.
மனித-விலங்கு மோதலை தடுக்க நடவடிக்கை
மனித-விலங்கு மோதலைக் குறைக்க, வனத்துறையுடன் இணைந்து வேளாண் பகுதிகளில் ஒழுங்குபடுத்தப்பட்ட வேட்டை, வேலி அமைத்தல், சமூகக் காடுகள், இழப்பீடு போன்ற முறையான நடவடிக்கைகளை பகுப்பாய்வு செய்து செயல்படுத்த வேண்டும்.
இயற்கை வேளாண்மை பாடத்திட்டம்
இயற்கை வேளாண்மை தொடர்பான கல்வி நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கள் இயற்கைப் பண்ணைகளைப் பார்வையிடுதல் போன்றவற்றை பாடத்திட்டத்தில் இணைத்து ஏற்பாடு செய்ய வேண்டும்.
உழவர்களுக்கான திட்டங்கள்
சிறு/குறு/பெண் உழவர்களுக்கு இன்றைய விவசாய வேலைக்கான சரியான பொருத்தமான கருவிகள், உபகரணங்கள் கிடைக்க திட்டங்களும் ஆராய்ச்சிகளும் உருவாக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க - TN Agri Budget 2022-23: தமிழகத்தில் விவசாயத்துக்கான தனி பட்ஜெட் பின்னணி
மேலும் படிக்க - விவசாயம்சார் கண்டுப்பிடிப்புகளுக்கு தலா ரூ. 2 லட்சம் பரிசு! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மேலும் படிக்க - Agri Budget 2021: வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் 3வது மாநிலம் தமிழகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ