Kallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனியை சேர்ந்த நபர்களுக்கு வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் போன்ற உடல் உபாதைகள் காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று (ஜூன் 19) அனுமதிக்கப்பட்டனர். முதற்கட்டமாக அவர்கள் பாக்கெட் சாராயத்தை அருந்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், மேல் சிகிச்சைக்காக பலரையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும், சேலம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். சேலம் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இருந்தும் சிறப்பு மருத்துவர் குழு வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கு தேவையான மருந்துக்களும் விழுப்புரம், சேலம், திருவண்ணமலை அரசு மருத்துவமனையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மொத்தம் 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
33 பேர் மரணம்
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுரேஷ், பிரவீன், மற்றொரு சுரேஷ், தனக்கொடி, வடிவு, சேகர், கந்தன், ஆறுமுகம், ஜெகதீஷ், மணிகண்டன், மணி, கிருஷ்ணமூர்த்தி, இந்திரா, நாராயணசாமி, ராமு, சுப்பிரமணி, டேவிட் உள்ளிட்ட 33 பேர் உயிரிழந்திருப்பதாக உறுதியாகிறது. உயிரிழப்புகள் அதிகமாகியுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இந்த கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக நேற்று கோவிந்தராஜ், தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது விஜயா என்கிற பெண்ணும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிய முதல்வர்
கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவரது X பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார். அந்த பதிவில்,"கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள்… pic.twitter.com/QGEYo9FWJq
— M.K.Stalin (@mkstalin) June 19, 2024
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்" என தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இன்று காலை 10 மணிக்கு சம்பவம் நடைபெற்ற பகுதிகள் மற்றும் மருத்துவமனை நேரில் சென்று விசாரணை நடத்த இருக்கிறார்.
கள்ளக்குறிச்சி விரையும் இபிஎஸ்...
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று அவரது X பதிவில், "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ள செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் நிலையில், மரபுப்படி மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றப்படும். மறைந்தோர்க்கு அதிமுக சார்பில் இரங்கலைப் பதிவுசெய்கிறேன்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ள செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன்.
இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் நிலையில், மரபுப்படி மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றப்படும். மறைந்தோர்க்கு…
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) June 20, 2024
ஆனால், இச்சூழலில், இந்த அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியாலும், மெத்தனப் போக்காலும் பரிதாபமாக உயிரிழந்தோரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களின் சொல்லொண்ணா துயரில் பங்குகொள்வதே பிரதானமாக அமைகிறது. மேலும் இறப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, இறந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க தற்போது கள்ளக்குறிச்சி விரைகிறேன்" என தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
இதுவரை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் உடனடியாக நியமனம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்னர். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மெத்தனால் கிடைத்தது எப்படி?
மேலும் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சையை மேற்பார்வையிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,"நடந்த தவறை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை. இறந்தோரின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்போரை அரசு ஒருபோதும் ஊக்கப்படுத்துவதில்லை. இதனை கருத்தில் எடுத்துக் கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அதை அரசாங்கம் எடுக்கும்.'' என்றார்.
பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை ஆய்வு செய்ததில் மெத்தனால் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. மெத்தனால் யாரிடமிருந்து வாங்கினார்கள்? என்பது குறித்து கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நிவாரணம் அறிவிக்கப்படுமா?
மேலும் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகிறது. சட்டமன்ற நிகழ்வுக்கு பின்பு கள்ளக்குறிச்சி கள்ளசாராயம் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால், உளவுத்துறை மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
மரக்காணம் கள்ளச்சாராய மரணங்கள் நடைபெற்று ஓராண்டு ஆகும் நிலையில் மீண்டும் அதே போன்று சம்பவம் தற்போது கள்ளக்குறிச்சியில் நடைபெற்று இருக்கிறது. தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு இந்த அவசர உயர் மட்ட குழு கூட்டமானது நடைபெற இருக்கிறது. கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்தாண்டு மரக்காணம் கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது விவகாரத்திலும் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | 2026ல் அதிமுக ஆட்சி உறுதி - எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ