மாணவ, மாணவிகளை தங்களது வீடுகளுக்கு அழைக்கக் கூடாது என்று பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது!
பேராசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவை தவிர்க்கும் விதமாக சென்னை பல்கலைக்கழகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் மாணவ, மாணவிகளை தங்களது வீடுகளுக்கு அழைக்கக் கூடாது என பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களை எச்சரித்துள்ளது.
மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் தங்களுக்கு பாலியில் தொந்தரவு இழைக்கப்படும் பட்சத்தில் அதெற்கென அமைக்கப்பட்ட பல்கலைக்கழகக் குழுவில் புகாரளிக்கலாம். மேலும், கல்லூரி பதிவாளர் அல்லது துணை வேந்தரிடமும் தங்களது புகாரை பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கலாம். புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேராசிரியர்கள் மாணவர்களை தங்கள் வீடுகளுக்கு அழைப்பதும் பாலியல் குற்றமாகவே கருதப்படும் என்று எச்சரித்துள்ளது. அதேப்போல் பேராசிரியர்களுடைய இல்லங்களில் மாணவர்கள் தங்கக் கூடாது எனவும் அறிவுரை வழங்கியுள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் பேராசிரியர்கள் மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லக் கூடாது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த விதமான பாலியல் தொந்தரவுகளுக்கும் கல்லூரியில் இடமில்லை என்று தெரிவித்துள்ள சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர், வரம்பு மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார்.