காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் மேட்டூர் அணை ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது!
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் மட்டம் கிடு கிடு என உயர்ந்து வருகிறது. மேலும் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகின்றது.
அதன்படி சுரங்கம் வழியாக 25000 கனஅடி நீரும், 16 கண் மதகு வழியாக 100000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. சுமார் 5 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வளவு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருவதால் அப்பகுதி மக்கள் அணையினை நோக்கி படையெடுத்து வருகின்றனர். முன்னதாக ஜூலை 23-ஆம் நாள் மேட்டூர் அணை முழுகொள்ளளவை எட்டியது. இந்நிலையில் தற்போது மீண்டும் மேட்டூர் அணை முழுகொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகின்றது.
இதனையடுத்து காவிரி கரையில் உள்ள சங்கிலி முனியப்பன் கோவில், பொறையூர், ரெட்டியூர், கோலநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும் சேலம் பகுதி மக்களுக்கு அறிவிக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.