பட்ஜெட்டில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன...? புட்டுபுட்டு வைத்த தவெக தலைவர் விஜய்

Budget 2025: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் உள்ள நிறை, குறைகள் என்னென்ன என்பது குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 1, 2025, 07:32 PM IST
  • ரூ.12 லட்சம் வருமான வரி விலக்கிற்கு வரவேற்பு - விஜய்
  • வழக்கம் போல் இந்த ஆண்டும் தமிழகம் புறக்கணிப்பு - விஜய்
  • பாரபட்சத்தோடு நடந்துகொள்வது சரியான அணுகுமுறை இல்லை - விஜய்
பட்ஜெட்டில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன...? புட்டுபுட்டு வைத்த தவெக தலைவர் விஜய் title=

Budget 2025, TVK President Vijay: 2025-26ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டிற்கு வரவேற்பு இருந்தாலும், பீகாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், முக்கிய எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. 

அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பட்ஜெட் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,"2025-26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அம்சங்கள் ஒரு சில மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஆண்டிற்கு 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பதை நான் உளமார வரவேற்கிறேன். இதன் மூலம் நடுத்தர மக்களுக்குக் குறிப்பிடும்படியான நிவாரணம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 

பட்ஜெட் 2025: வரவேற்பும், ஏமாற்றமும் - விஜய்

அதே சமயம் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய பெட்ரோல் / டீசல் வரிக் குறைப்பு மற்றும் GST வரிக் குறைப்பு / எளிமைப்படுத்துதல் பற்றி எந்த ஓர் அறிவிப்பும் இல்லாதது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.

மேலும் படிக்க | இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்! எடப்பாடி பழனிசாமி எழுப்பிய சரமாரி கேள்விகள்!

முதல்முறையாகத் தொழில்முனைவோராக உருவாகும் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உள்ளடங்கிய முதல் 5 லட்சம் பேர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.2 கோடி வரை கடன் வழங்கப் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் உளமார வரவேற்கிறது. அதே சமயம் விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் போதிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

குறிப்பாக, சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வாயிலாக இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையிலான திட்டங்கள் ஏதும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

பட்ஜெட் 2025: தமிழகம் புறக்கணிப்பு 

புதிய ரயில் தடங்கள், சாலைகள், கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்ற தமிழ்நாட்டுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு எந்த ஓர் அறிவிப்பும் இடம்பெறவில்லை. தமிழகத்தில் மிகத் தொன்மையான இரும்பு நாகரிகம் இருந்தது அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கின்ற கண்டுபிடிப்பாகும். இதற்கு உரிய அங்கீகாரமும் சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நிதியும் வழங்காதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

மேலும் படிக்க | Union Budget 2025: பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அறிவிப்புகள் இருக்கா? மீண்டும் கல்தாவா?

அணுமின் உற்பத்தி அறிவிப்புக்கு கண்டனம்

அணுஉலை மின் உற்பத்தி PPP (Public Private Partnership) மூலம் தனியார் மயமாக்கப்படுதலுக்கு இந்த நிதிநிலை அறிக்கை முக்கியத்துவம் வழங்கி இருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்திக்கான தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்தக் காலக்கட்டத்தில் மீண்டும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் அணுமின் உற்பத்தி தொடர்பான அறிவிப்பை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். Asset Monetization வாயிலாகப் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகள், ஒரு சில பெரும் தனியார் நிறுவனங்களின் கைகளுக்குச் சென்று விடுமோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 

பட்ஜெட் 2025: பாராபட்சம் கூடாது

ஒவ்வோர் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போதும், சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களைக் கருத்தில் கொண்டு, அந்த மாநிலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவது மற்ற மாநிலங்களையும் அந்த மாநில மக்களையும் அவமதிப்பதாக உள்ளது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும்.

வழக்கம் போல் இந்த ஆண்டும் ஒன்றிய அரசானது தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளது. அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே ஒன்றிய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். மாறாக, பாரபட்சத்தோடு நடந்துகொள்வது சரியான அணுகுமுறை இல்லை" என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க | Income Tax: ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்தை தாண்டினால்... எவ்வளவு வரி செலுத்த வேண்டும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News