மருத்துவர்கள் பற்றாகுறை இனி இல்லை; தமிழக முதல்வர் அதிரடி...

கொரோனா வைரஸ் வெடிப்பை அடுத்து, தமிழகத்தில் ஓய்வுபெற இருந்த மருத்துவ ஊழியர்களின் சேவைகளை இரண்டு மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நீட்டிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Last Updated : Mar 31, 2020, 07:29 PM IST
மருத்துவர்கள் பற்றாகுறை இனி இல்லை; தமிழக முதல்வர் அதிரடி... title=

கொரோனா வைரஸ் வெடிப்பை அடுத்து, தமிழகத்தில் ஓய்வுபெற இருந்த மருத்துவ ஊழியர்களின் சேவைகளை இரண்டு மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நீட்டிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி இன்று ஓய்வு பெறவிருந்த மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் பணி அடுத்த இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில்., "மார்ச் 31, 2020 அன்று ஓய்வு பெறவிருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் மேலும் இரண்டு மாதங்கள் பணியாற்றுவர்" என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அச்சுறுத்தலைச் சமாளிக்க கூடுதல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் 530 மருத்துவர்கள், 1508 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 1000 செவிலியர்களை நியமிக்க மார்ச் 27 அன்று தமிழக முதல்வர் உத்தரவிட்டார். முதலமைச்சர் பழனிசாமியின் உத்தரவுப்படி நியமனக் கடிதங்கள் கிடைத்த மூன்று நாட்களுக்குள் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் கடமையில் சேருமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், முதலமைச்சரும் இன்று மாநில மக்களுக்கு நிவாரணம் அறிவித்தார் மற்றும் பல்வேறு கடன்கள் மற்றும் பிற கொடுப்பனவுகளுக்கு உரிய பணம் செலுத்துவதற்கான நேரத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.

மருத்துவர்கள் பணி நீட்டிப்பு மட்டுமல்லாது, தமிழக முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தவரவுகள் பின்வருமாறு...

கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு (30.6.2020 வரை) நீட்டிக்கப்படுகிறது. வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்களுக்கு தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

எடைகளும்,அளவைகளும் சட்டம் தமிழ்நாடு கடைகள் (ம) நிறுவனங்கள் சட்டம் (TN Shops & Establishments Act), உள்ளாட்சி அமைப்புகளால் அமல்படுத்தப்படும் கேடும் குற்றமும் பயக்கும் தொழிற்சட்டம் ஆகியவற்றின் கீழ், புதுப்பிக்கப்பட வேண்டிய உரிமங்களின் கால அவகாசம் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

"கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம்" என்ற சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான சிறப்பு கடனுதவி திட்டம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திடம் கடனுதவி பெற்றுள்ள 2,000 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அவசர மூலதன தேவைகளுக்காக செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு தவணைத்தொகை செலுத்துவதற்கும், அனைத்து மீனவ கூட்டுறவு சங்கங்கள், கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலிருந்து பெறப்பட்ட கடனுதவிகளுக்கான தவணைத்தொகை செலுத்துவதற்கும், கால அவகாசம் 3 மாதங்களுக்கு (30.6.2020 வரை) நீட்டிக்கப்படுகிறது.

சிப்காட் தொழில் பூங்காவில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் பராமரிப்பு கட்டணம் செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. மோட்டார் வாகன சட்டப்படி உரிமங்கள் (ம) வாகன தகுதிச் சான்றுகள் (License & FC) புதுப்பிக்கப்பட வேண்டிய கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

தற்போதுள்ள சூழ்நிலையில், வாடகை வீடுகளில் குடியிருப்போர் வாடகை செலுத்துவதிலுள்ள சிரமங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். எனவே மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான  வீட்டு வாடகை தொகையை 2 மாதங்கள் கழித்து பெற்றுக் கொள்ள வேண்டும் என வீட்டு உரிமையாளர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் (TIIC) கடன் பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தவணைகளை செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. சிப்காட் நிறுவனத்திடம் மென்கடன் பெற்றுள்ள தொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் போன்றவை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு (30.6.2020 வரை) நீட்டிக்கப்படுகிறது என பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Trending News