தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரை கீழுரைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் மணி(60). இவர் கூலி தொழில் செய்து கொண்டு அவ்வப்போது ஆடு மேய்த்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள், 4 மகள்கள் உள்னனர். ஒரு மகன் மட்டும் திருமணம் ஆகாமல் இருந்து வருகிறார். மற்ற அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இந்த நிலையில் நேற்று மாலை மணக்கரை ஊருக்கு கீழ்புறம் உள்ள மாடசாமி கோவில் அருகே ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு, அருகில் இருந்த ஒரு வேப்பரத்தின் அடியில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென அங்கு இரண்டு பைக்குகளில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் தூங்கி கொண்டிருந்த மணியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது.
இதில் அவருக்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் அதிகமாக வெட்டு விழுந்துள்ளது. அதன்பின்னர் அந்த வழியாக வந்த நபர் சத்தமிடமே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதில் வெட்டுக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மணி பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதுகுறித்து முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விரைந்து வந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுரேஷ் மற்றும் முறப்பநாடு இன்ஸ்பெக்டர் தில்லைநாயகம் ஆகிய இருவர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், கொலை செய்ததற்கான காரணம் என்ன என்று தெரியவேண்டும், பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மணக்கரை கீழுரைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 50க்கும் மேற்பட்டோர் ஊரில் இருந்து ஊர்வலமாக வல்லநாட்டில் உள்ள திருநெல்வேலி & தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட வருகை தந்தனர்.
ஆனால் கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரிக்கு முன்பே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் பொதுமக்கள் சாலை மறியலுக்கு செல்லாமல் இருக்க மணக்கரை & வல்லநாடு சாலையில் கயிறுகள் கட்டியும், போலீசார் வாகனங்களை குறுக்கே நிறுத்தியும் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதற்கிடையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையில் மதிய உச்சி வெயிலில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரும் சாலையில் அமர்ந்திருந்தனர். அவர்களை மரத்தடி நிழலில் ஒதுங்கி நிற்பதற்கு கூட போலீசார் அனுமதிக்கவில்லை.
அதன்பின்னர் தூத்துக்குடி சப் கலெக்டர் கௌரவ்குமார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதற்கிடையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க நிறுவனர் கண்ணபிரான் மற்றும் புதிய தலைமுறை கட்சி பொறுப்பாளர்கள் போலீசாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து ஊருக்கு சென்றனர். அதன்பின்னர் கட்சியினரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர், அவர்களை போலீசார் அனுமதித்தனர்.
ஆனால் தற்போது வரை இறந்தவர் உடலை வாங்குவது குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெற வில்லை.
மேலும் படிக்க | பழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுடன் தொடங்கியது..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ