மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது தொடர்பாக சிவசேனா மற்றும் பாரதீய ஜனதா கட்சி இடையே நடந்து வரும் உளவியல் இழுபறிக்கு மத்தியில், சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் செவ்வாய்க்கிழமை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள இல்லத்தில் சந்தித்தார். மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யரியுடன் சந்திப்பு நடத்திய பின்னர் ராஜ்ய எம்.பி.யான ரவுத் உத்தவ் தாக்கரேவை சந்திதுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திப்பை அடுத்து ஊடகங்களுடன் பேசிய ரவுத் தெரிவிக்கையில்., ஆளுநர் கோஷ்யரியுடனான பேச்சுவார்த்தை குறித்து சிவசேனா தலைவருக்கு விளக்கமளித்ததாகவும், மாநிலத்தின் அரசியல் நிலைமை குறித்து ஆளுநரின் கண்ணோட்டத்தைப் பற்றியும் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். மகாராஷ்டிராவில் பாஜக-வை யார் வழிநடத்த வேண்டும் என்று கேட்டபோது, இந்த முடிவை பாஜக எடுக்க வேண்டும் என்று கூறிய ரவுத், தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் நிதின் கட்கரி இருவரும் சிவசேனாவுக்கு ஒரே மாதிரியானவர்கள் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன, என்றபோதிலும் மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்த முடிவுகள் வெளியாக தாமதமாகி வருகிறது. ஏனெனில் சிவசேனா தனது ஆதரவைப் பெறுவதற்காக 50-50 சூத்திரத்தை செயல்படுத்துமாறு பாஜக-விடம் கேட்டுக் கொண்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கு முன்னர் பாஜக தலைவர் அமித் ஷா ஒப்புக் கொண்டதாக 50-50 சூத்திரத்தின்படி, முதலமைச்சர் பதவி இரு கட்சிகளுக்கிடையில் 2.5 ஆண்டுகளுக்கு சுழல வேண்டும் என சிவசேனா கோருகிறது. ஆனால், மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக ஃபட்னாவிஸ் தொடருவார் என்றும் அவர் ஐந்து ஆண்டுகள் முழுமையான முதல்வராக இருப்பார் என்றும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிவசேனாவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில் பாஜக சிறிதளவும் அக்கறை காட்டவில்லை. இதன் காரணமாக மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வும், சிவசேனாவும் நட்பு கட்சிகளா போட்டியிட்டன, 105 MLA-க்களுடன் பாஜக மாநிலத்தின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது, சிவசேனா 56 இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக திங்களன்று, மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விவாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.