தலைநகர் டெல்லியில் காற்று மாசு, இன்று மீண்டும் மோசமான நிலைக்குச் செல்லும், என மத்திய காற்றுத்தரம் மற்றும் தட்பவெப்ப ஆய்வு அமைப்பு தகவல்!
தலைநகர் டெல்லியில் (Delhi Air Pollution) நாளுக்கு நாள் காற்றின் மாசு அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. காற்று மிகவும் மோசமடைந்து ஆபத்து அளவை எட்டி இருக்கிறது. தற்போது டெல்லி (Delhi) மக்கள் காற்றை சுவாசிக்க முடியாமல் திணறி வருகின்றனர். உலகிலேயே காற்று மாசு அதிகமாக இருக்கும் நகரமாக டெல்லி உருவெடுத்துள்ளது. கடந்த சில தினங்களாக டெல்லியில் மாசு கலந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலைமையை சமாளிக்க முடியாமல் அனைவரும் திணறும் நிலை உருவாகி உள்ளது. இதனால் சாலை விபத்துக்கள், ரயில் தாமதம், விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் காற்று மாசு, இன்று மீண்டும் மோசமான நிலைக்குச் செல்லும், என மத்திய காற்றுத்தரம் மற்றும் தட்பவெப்ப ஆய்வு அமைப்பு கூறியிருக்கிறது. தேசிய தலைநகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் புதன்கிழமை மோசமடைய வாய்ப்புள்ளதாகவும், டெல்லியில் உள்ள காற்றின் தரக் குறியீடு (AQI) 269 ஆக உயரும் என வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (SAFAR) தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக, சாதகமான அளவில் காற்று வீசியதால், காற்று மாசு குறைந்திருந்தது. ஆனால் காற்று வீசுவது அடுத்த 48 மணி நேரத்தில் படிப்படியாக குறைந்துவிடும் என்பதால், காற்று மாசின் அளவு மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.சாந்தினி செளக், திர்பூர், டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட தலைநகரின் பல இடங்களில், காற்று மாசு அளவு 300-க்கும் அதிகமாகவே பதிவாகியுள்ளது.
சாந்தினி சௌக்கில் காற்றின் தரம் 346, திர்பூர் 304, டெல்லி பல்கலைக்கழகம் 301, மதுரா சாலை 296, IIT டெல்லி மற்றும் லோதி சாலை 283, பூசா 252, விமான நிலையம் (டி 3) 241, மற்றும் அயனகர் 193. நொய்டாவில் உள்ள AQI 333 ஆகவும், குருகிராம் 207 ஆகவும் இருந்தது.
நவம்பர் 21 அதிகாலைக்குள் 'கடுமையான' பிரிவின் கீழ் இறுதியில் AQI மோசமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. AQI நவம்பர் 22 வரை கடுமையான பிரிவில் இருக்க வாய்ப்புள்ளது. AQI 'கடுமையான' வகைக்கு மோசமடைவது எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் நவம்பர் 23 க்குள் ஒரு புதிய மேற்கத்திய இடையூறு கடந்து செல்வது காற்றின் வேகத்தை அதிகரிக்கும் மற்றும் காற்றோட்டத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதால் நிலை நீடிக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.