டெல்லி தேர்தல் வரலாறு... 1952 முதல் இன்று வரை... சில சுவாரஸ்யமான தகவல்கள்

உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாவின் தலைநகரம் டெல்லி. இங்கு நடைபெறும் தேர்தல்கள் நாட்டின் மற்ற மாநில தேர்தல்களில் இருந்து பல வழிகளில் வேறுபடுகின்றன. டெல்லியின் தேர்தல் பயணம் அதிகார மோதல் மற்றும் பொதுமக்களின் குரல் ஆகியவற்றுக்கு இடையே எப்போதும் சுவாரஸ்யமாகவே இருந்து வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 8, 2025, 09:28 AM IST
  • டெல்லி அரசியலில் காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளன.
  • நாட்டின் மற்ற மாநில தேர்தல்களில் இருந்து பல வழிகளில் வேறுபடுகின்றன.
  • 2013 தேர்தலில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்தது.
டெல்லி தேர்தல் வரலாறு... 1952 முதல் இன்று வரை... சில சுவாரஸ்யமான தகவல்கள் title=

டெல்லி தேர்தல் வரலாறு: டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வரவுள்ளன. இந்நிலையில் டெல்லியின் தேர்தல் வரலாறு தொடர்பான சில சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ளலாம். உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாவின் தலைநகரம் டெல்லி. இங்கு நடைபெறும் தேர்தல்கள் நாட்டின் மற்ற மாநில தேர்தல்களில் இருந்து பல வழிகளில் வேறுபடுகின்றன. டெல்லியின் தேர்தல் பயணம் அதிகார மோதல் மற்றும் பொதுமக்களின் குரல் ஆகியவற்றுக்கு இடையே எப்போதும் சுவாரஸ்யமாகவே இருந்து வருகிறது. 

கடந்த 1952ம் ஆண்டு முதல் சட்டசபை உருவானதில் இருந்து, டில்லி அரசியலில் பல பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக 1956 முதல் 1993 வரை டெல்லி சட்டமன்றம் கலைக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. டெல்லி அரசியலில் காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளன. 

1952: டெல்லியில் முதல் சட்டசபை தேர்தல்

1951-52ல் நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில், காங்கிரஸ் 39 இடங்களிலும், பாரதீய ஜனசங்கம் 5 இடங்களிலும், சோசலிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. சௌத்ரி பிரம்ம பிரகாஷ் டெல்லியின் முதல் முதலமைச்சராக பதவியேற்றார், ஆனால் அப்போதைய தலைமை ஆணையர் ஏ.டி. பண்டிதருடன் அவருக்கு இருந்த கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக்கொண்டே இருந்தன. இறுதியில், பிரம்ம பிரகாஷ் 1955ம் ஆண்டில் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. பிறகு, குர்முக் நிஹால் சிங் முதலமைச்சரானார். ஆனால் 1956ம் ஆண்டில் டெல்லி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு சட்டசபை கலைக்கப்பட்டது.

டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க கோரிக்கை

1966 ஆம் ஆண்டில், டெல்லி நிர்வாகச் சட்டத்தின் கீழ், 56 தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் 5 பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட 'மெட்ரோபாலிட்டன் கவுன்சில்' உருவாக்கப்பட்டது. ஆனால் அதற்கு பரிந்துரை அதிகாரங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, 1991ம் ஆண்டில் நரசிம்மராவ் அரசு டெல்லிக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட சட்டசபையை வழங்க முடிவு செய்தது. 1993ல் முதன்முறையாக 70 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட்டு, அதில் பாஜக 49 இடங்களில் வெற்றி பெற்று மதன் லால் குரானாவை முதல்வராக்கியது. 199ம் ஆண்டில் ஹவாலா ஊழலில் அவரது பெயர் அடிபட்ட பிறகு, குரானா ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. பின்னர் சாஹிப் சிங் வர்மா முதலமைச்சரானார். 1998ம் ஆண்டில் பா.ஜ.க, சுஷ்மா ஸ்வராஜை முதல்வராக ஆக்கியது. ஆனால் காங்கிரஸின் வெற்றியை தடுக்க முடியவில்லை.

1998 - 2013: ஷீலா தீட்சித் சகாப்தம்

1998ம் ஆண்டில் காங்கிரஸ் 52 இடங்களில் வெற்றி பெற்று அமோக வெற்றி பெற்று ஷீலா தீட்சித் முதல்வரானார். அவரது ஆட்சிக் காலத்தில் டெல்லியில் மெட்ரோ, மேம்பாலம் கட்டுமானம், சிஎன்ஜி பேருந்துகள் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, டெல்லியின் தோற்றத்தை முற்றிலும் மாற்றியது. 2003 மற்றும் 2008ல் காங்கிரஸ் முறையே 47 மற்றும் 43 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. ஆனால் 2013 தேர்தலில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்தது.

ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி மற்றும் தொங்கு சட்டசபை

அன்னா ஹசாரேவின் ஜன்லோக்பால் இயக்கத்தில் இருந்து உருவான ஆம் ஆத்மி கட்சி, 2013ம் ஆண்டில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு 28 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு 31 இடங்கள் கிடைத்தாலும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை, அதன் பிறகு காங்கிரஸின் வெளி ஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி அமைத்தார். ஆனால், லோக்பால் மசோதா நிறைவேற்றப்படாததால், அவர் 49 நாட்களுக்குள் ராஜினாமா செய்தார், அதைத் தொடர்ந்து டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

2015 மற்றும் 2020: ஆம் ஆத்மி கட்சியின் வரலாற்று வெற்றி

2015 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களில் 67 இடங்களில் வெற்றி பெற்று அரசியல் வரலாற்றை படைத்தது. பாரதிய ஜனதா 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சரானார், அவரது அரசாங்கம் கல்வி, சுகாதாரம், மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்தியது. 2020 தேர்தலில் கூட, ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. அதே நேரத்தில் பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் மீண்டும் பூஜ்ஜியம் ஆனது. இப்போது அனைவரது பார்வையும் 2025 ஆம் ஆண்டின் தேர்தல் முடிவுகள் மீது உள்ளது. பாஜக மீண்டும் ஆட்சி அமைக்குமா அல்லது டெல்லி மக்களின் நம்பிக்கையை வென்று ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வருமா? என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெர்ந்து விடும்.

மேலும் படிக்க | வாக்கு எண்ணிக்கை | டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2025 எப்போது? ​​எங்கு? பார்க்கலாம்

மேலும் படிக்க | Delhi Election Result 2025 | டெல்லி தேர்தல் எதிர்பாராத திருப்பம்! மீண்டும் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி ஆட்சி அமைகிறது?

மேலும் படிக்க | டெல்லி தேர்தல் 2025: தொகுதி வாரியாக அனைத்து கட்சி வேட்பாளர்களின் முழு பட்டியல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News