காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து பிறவிலேயே நான் காங்கிரஸ்காரன் என கூறியுள்ளார்.
பா.ஜனதாவில் எம்.பி.யாக இருந்த சித்து அந்த கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் விலகினார். அதோடு தனது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை நேற்று சித்து சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதில் முன்னாள் மத்திய மந்திரியும், டெல்லி காங்கிரஸ் தலைவருமான அஜய் மக்கன் பங்கேற்று சித்துவுக்கு காங்கிரஸ் சால்வை அணிவித்து கொடியை வழங்கினார்.
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் சித்து போட்டியிடுகிறார். அவர் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் களம் இறங்குகிறார். இது அவரது மனைவி கடந்த தேர்தலில் வென்ற தொகுதியாகும். சித்துவின் மனைவி கவூர் ஏற்கனவே பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துவிட்டார். தற்போது சித்துவின் வருகை மூலம் பஞ்சாப் தேர்தலில் காங்கிரக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.
பின்னர் சித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நான் பிறவியிலேயே காங்கிரஸ்காரன். காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவன். இது என் தாய் கழகம். எனது தாய் வீட்டுக்கு நான் மீண்டும் திரும்பி வந்து உள்ளேன்.
பிகாரில் லாலுவும், நிதிஷ்குமாரும் இணைந்து செயல்படும் போது நானும், அம்ரீந்தர் சிங்கும் இணைந்து செயல்பட முடியாதா? யாருடனும் இணைந்து நான் தேர்தல் பணியாற்ற தயாராக இருக்கிறேன். காங்கிரஸ் மேலிடம்தான் இதுகுறித்து முடிவு செய்யும்.
பஞ்சாப்பில் பிரகாஷ்சிங் பாதல்- பா.ஜனதா கூட்டணி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். பஞ்சாப்பை மீட்டு எடுக்கவே நான் காங்கிரசில் இணைந்துள்ளேன். பஞ்சாப்பை விற்கும் பாதலின் முயற்சியை மக்களிடம் விரிவாக தெரிவிப்பேன். இந்த அரசு போதை மருந்து கடத்தலுக்கு துணை போகிறது. போதை மருந்து கடத்தல்காரர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
பஞ்சாப் மக்களின் நலனுக்காகவும், சுயமரியாதைக்காகவும் நான் போராட முடிவு செய்து விட்டேன். தனிப்பட்ட காரணத்துக்காக எனது போராட்டம் இருக்காது. பிரகாஷ்சிங் பாதல் ஆட்சியை விட்டு ஓடுவார். அவர் இருக்கைக்கு பஞ்சாப் மக்கள் வர தயாராகி விட்டார்கள் என சித்து கூறினார்.
117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 4-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
Congress Vice President Rahul Gandhi welcomes Navjot Singh Sidhu into the Indian National Congress pic.twitter.com/tqeVNSWrC5
— INC India (@INCIndia) January 15, 2017