தீவிரவாத அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில் நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு மற்றும் சோதனைகளை 'உஷார்' படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
விமான நிலைய பாதுகாப்புக்கு என பிரத்யேகமாக பாதுகாப்பு படை பிரிவை உருவாக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் கீழ் நாட்டின் அனைத்து விமான நிலையங்களின் சோதனை மற்றும் பாதுகாப்பை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 98 விமான நிலையங்களில் 59 விமான நிலையங்களுக்கு மத்திய தொழிற் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கி வருகிறது. மற்ற விமான நிலையங்களுக்கு மத்திய தொழிற் பாதுகாப்பு படை பாதுகாப்பு இல்லை.
இந்நிலையில், சர்வதேச அளவில் அவ்வப்போது விமான நிலையங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய உள்துறை அமைச்சகம்:- உளவுத்துறை, மத்திய தொழிற் பாதுகாப்பு படை மற்றும் விமானத்துறை பாதுகாப்பு ஆணையம் ஆகியவை இணைந்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு தணிக்கை செய்து அடுத்த 20 நாட்களுக்குள் அறிக்கையை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.