புதுடில்லி: கர்நாடகாவின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் மனு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏகள் சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி மற்றும் சபாநாயகர் தரப்பில் ஆஜரான அபிஷேக் சிங்வி ஆகியோர் வாதம் செய்து வருகின்றனர்.
வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி பேசுகையில், தகுதிநீக்க நடவடிக்கையை தவிர்க்க 8 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். 8 எம்எல்ஏக்களும் சாபாநாயகர் முன்பு ஆஜராகி ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை. நேரடியாக ஆஜராகி கருத்து சொல்லாமல் எப்படி நடவடிக்கை எடுப்பது என வாதம் செய்தார். மேலும் கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் முடிவு எடுக்க பேரவைத் தலைவருக்கு காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் விதிக்க முடியாது எனவும் கூறினார்.
வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தரப்பில், சபாநாயகராக இருந்தாலும் நீதிமன்றங்களுக்கு பதில் அளிப்பது அவரது கடமை. எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வாதம் செய்தார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி, தற்போது சபாநாயகர் ராஜினாமா கடிதம் மற்றும் தகுதி நீக்க நடவடிக்கையும் எடுக்கக்கூடாது, தற்போதைய நிலையே தொடர வேண்டும். வரும் செவ்வாய்க்கிழமை வரை சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.