மஹாராஷ்டிரா மாநிலம் பீமா கோரேகாவ்ன் என்ற பகுதியில், 1818 -ம் ஆண்டு நடந்த போரில், மகர் எனப்படும் தலித் இனத்தவர்கள் பங்கேற்றனர். அந்த போரின் 200-வது வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது, தலித்மக்களுக்கும், மராத்தா இன மக்களுக்கும் இடையே மோதல் வன்முறையாக மாறியது. ஓர் இளைஞர் உயிரிழந்தார். இந்த வன்முறை சம்பவம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவியது.
இந்த கலவரத்தில் போலீஸ் வேன் உள்பட 15 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பல வீடுகளும் சேதப்படுத்தப்பட்டன. இதனால், புனே நகரம் முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் ராகுல் என்ற 28 வயது வாலிபர் பலியானார்.போலீசார் தடியடி நடத்தி கலவரக்காரர்களை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவியதால் ஏராளமான மாநில ரிசர்வ் படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இந்தநிலையில், மோதலில் வாலிபர் பலியான சம்பவத்தை கண்டித்து, நேற்று மாநிலம் முழுவதும் குறிப்பிட்ட சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மும்பையில் செம்பூர், கோவண்டி பகுதியில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் துறைமுக வழித்தடத்தில் ரெயில்சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
புனேயில் ஏற்பட்ட இந்த மோதல் மும்பை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பரவியது. நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 134 அரசு பஸ்கள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால், மராட்டியத்தின் பிரதான நகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வன்முறையைக் கண்டித்து, மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பாரிபா பகுஜன் மகா சங்கத் தலைவரும், சட்டமேதை அம்பேத்கரின் பேரனுமான, பிரகாஷ் அம்பேத்கர் கூறுகையில், “ இந்த வன்முறை சம்பவங்கள், தலித் மக்களுக்கும், மராத்தா மக்களுக்கும் இடையேயான மோதல் இல்லை. வன்முறை ஏற்படாமல் தடுக்க, மாநில அரசு தவறிவிட்டது. வன்முறையைக் கண்டித்து, இன்று மராட்டியம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை ஏற்க முடியாது.உயர் நீதிமன்றத்தின் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்றார். முழு அடைப்புக்கு விடுத்துள்ள நிலையில், மும்பை உட்பட மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
#Mumbai: Security deployment in Ghatkopar's Ramabai Colony and Eastern Express Highway #BhimaKoregaonViolence pic.twitter.com/KfaeJJJ4Mi
— ANI (@ANI) January 3, 2018
Maharashtra: Protesters halt a train at Thane Railway Station over #BhimaKoregaonViolence pic.twitter.com/BHLsWmfpmk
— ANI (@ANI) January 3, 2018