தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள கால்வாய் நீரை பரிசோதித்ததில் போலியோ கிருமிகள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
இதையடுத்து, அம்மாநில அரசு பொதுமக்களை உஷார் படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராஜேஸ்வர் திவாரி, கூறும் போது அம்பெர்பெட் நகரில் கழிவுநீர் நீர் மாதிரிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வக சோதனையில் போலியோ கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அடுத்தவாரம் போலியோ தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வரும் திங்கள் கிழமை தொடங்க உள்ள இந்த தடுப்பூசி முகாமில் ஆறு வாரம் முதல் மூன்று வயது வரை உள்ள சுமார் 3,50, 000 குழந்தைகள் இந்த தடுப்பூசியை போட்ட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். தெலுங்கானாவை தொடர்ந்து நாடு முழுவதும் மீண்டும் போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோய் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதற்கு மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இன்று வெளியாகியுள்ள கண்டன அறிக்கையில், காங்கிரஸ் தலைமையிலான அரசின் ஆட்சிக்காலத்தில் போலியோவில் இருந்து இந்தியாவை பிரதமர் மன்மோகன் சிங் குணப்படுத்தினார். திரு.மோடி அவர்களே..! போலியோ மீண்டும் வர ஏன் அனுமதி அளிக்கப்பட்டது? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.