இந்திய திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரகு தாத்தா' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. :தி ஃபேமிலி மேன்', 'ஃபார்ஸி' ஆகிய வெற்றி பெற்ற இணைய தொடர்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்குநராக அறிமுகமாகும் 'ரகு தாத்தா' எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம்.எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். காமெடி டிராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார்.
மேலும் படிக்க | பிரபல நடிகரின் 20 வயது மகள் உயிரிழப்பு! காரணம் என்ன?
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதன் போது நடிகை கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இயக்குநர் சுமன் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் இயக்குநர் சுமன் குமார் பேசுகையில், ''ரகு தாத்தா என்ற படத்தை இயக்குவேன் என்று எதிர்பார்க்கவில்லை. என்னுடைய நண்பர்கள் கிங்ஸ்லி மற்றும் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் நடைபெற்ற விவாதத்தின் போது.. 'உறவினர் ஒருவர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவாறே அவருடைய பதவி உயர்வுக்காக இந்தி தேர்வு ஒன்றினை எழுதினார்' என்ற தகவலை பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சு என்னை கவர்ந்தது. மேலும் இப்படத்திற்கான கருவாகவும் உருவானது. இந்த திரைப்படம் இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை தான் நகைச்சுவையாக பேசுகிறது'' என்றார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், "இயக்குநர் சுமன் குமார் கொரோனா தொற்று காலகட்டத்தில் அவருடைய 'தி ஃபேமிலி மேன்' இணைய தொடருக்கு என்னுடைய இசையில் வெளியான பாடல்களை பயன்படுத்துவது தொடர்பாக பேசத் தொடங்கினார். அந்த சந்திப்பு கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் வரை சென்றது. அவர் சொன்னது சரிதான். இரண்டு லூசுகள் சந்தித்தால் எப்படி இருக்கும்..? இயக்குநர் சுமன் பயங்கரமான லூசு. அவருடைய பேச்சு ஜாலியாக இருந்தது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை முதன் முதலில் பின்னணி இசை இல்லாமல் பார்க்கும் போது.. ஒரு கே. பாக்யராஜ் படத்தை பார்த்தது போல் இருந்தது. ஒரு தீவிரமான அரசியலை அவர் நகைச்சுவையாகவும், மென்மையாகவும் காட்சிப்படுத்தி இருப்பார்" என்றார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் பேசுகையில், ''சந்தோஷமான தருணம் இது. இயக்குநர் சுமன் - அறிமுகமான நண்பர் விஜய்யுடன் வருகை தந்து, சந்தித்து கதையை சொன்னார். அவர் கதையை சொல்லிவிட்டு சிரித்து விடுவார். அதன் பிறகு என்னை பார்ப்பார். அதற்குப் பிறகுதான் நாங்கள் சிரிப்போம். அவர் என்னை பார்க்கும் போது..'காமெடி சொன்னால் சிரிக்கவே மாட்டேன் என்கிறார்களே..' என தயக்கத்துடனே எங்களைப் பார்ப்பார். அதன் பிறகு தான் நாங்கள் சிரிப்போம். அதன் பிறகு தான் அவரிடம் கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நடிக்கிறேன் என சம்மதம் சொன்னேன். அவரிடம் உங்களுடைய அணுகுமுறை நன்றாக இருக்கிறது. இதற்கு முன்னால் இப்படி ஒரு திரைக்கதையை நான் கேட்டதில்லை. அதனால் 'ரகு தாத்தா'வில் நடிக்கிறேன் என்று சொன்னேன்.
சுமன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நான் நடித்திருக்கிறேன் எனும்போது இன்னும் பெருமிதம் கூடுகிறது. இதற்காக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் மற்றும் கார்த்திக் கௌடா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரகு தாத்தா - ஒரு முழுமையான காமெடி டிராமா. இந்தப் படம் இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை பற்றி தான் பேசுகிறது. எந்த மாதிரியான திணிப்பு என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் படத்தில் சிறிய அளவில் கருத்து சொல்ல முயற்சித்திருக்கிறோம். ஆனால் அது பிரச்சாரமாக இருக்காது. இது படத்தை பார்க்கும் போது ரசிகர்களுக்கு புரியும்" என்றார்.
மேலும் படிக்க | எஞ்ஞாயி எஞ்சாமி பாடலின் போது பிரச்சனையானது - தெருக்குரல் அறிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ