Nesippaya Movie Review: விஷ்ணுவர்தனின் நேசிப்பாயா திரை விமர்சனம் - பிளஸ், மைனஸ் இதோ

Nesippaya Movie Review: விஷ்ணுவர்தன் இயக்கத்தில், ஆகாஷ் முரளி - அதிதி ஷங்கர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் நேசிப்பாயா திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 14, 2025, 05:54 PM IST
  • ஆகாஷ் முரளி இத்திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார்.
  • அவர் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆவார்.
  • காதல் + ஆக்‌ஷன் களத்தில் இத்திரைப்படம் உருவாகி உள்ளது.
Nesippaya Movie Review: விஷ்ணுவர்தனின் நேசிப்பாயா திரை விமர்சனம் - பிளஸ், மைனஸ் இதோ title=

Nesippaya Movie Review In Tamil: அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கியதில் பல்வேறு திரைப்படங்கள் பொங்கல் அன்று களத்தில் குதிப்பதாக அறிவித்தன. அதில், விஷ்ணு வர்தன் இயக்கிய 'நேசிப்பாயா' திரைப்படமும் ஒன்று எனலாம்.

படத்தின் முன்னோட்ட காட்சிகளை பார்த்தே போதே, காதலும் ஆக்‌ஷனும் கலந்த திரைப்படமாக நேசிப்பாயா உருவாகியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. அப்படியிருக்க, பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகியிருக்கும் நேசிப்பாயா திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கு காணலாம்.

விஷ்ணுவர்தனின் நேசிப்பாயா

காதல் + ஆக்‌ஷன் என்ற களம் விஷ்ணுவர்தனுக்கு புதிதல்ல. 'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்', 'சர்வம்' என தமிழிலேயே விஷ்ணுவர்தன் இதற்கு முன் இந்த களத்தில் பல நல்ல முயற்சிகளை எடுத்திருக்கிறார் எனலாம். அதுவும் புதுமுகங்கள் அல்லது மக்களுக்கு பரீட்சயம் குறைந்த முகங்களை மக்கள் மனதில் பதிய வைக்கும் இயக்குநராகவும் அறியப்பட்டவர் விஷ்ணுவர்தன்.

மேலும் படிக்க | மதகஜராஜா திரைப்படம் 1 நாளில் செய்த வசூல் எவ்வளவு? இத்தனை கோடியா?

அப்படியிருக்க, மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி மற்றும் இயக்குநர் ஷங்கரின் மகளுமான அதிதி ஷங்கர் ஆகியோரை பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து, 'நேசிப்பாயா' திரைப்படத்தை விஷ்ணுவர்தன் எடுத்திருக்கிறார்.

நேசிப்பாயா - மீதான எதிர்பார்ப்புகள்

இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது என அறிவிக்கப்பட்டபோது ரசிகர்கள் மத்தியில் சிறு சிறு பேச்சுக்கள் எழுந்தன. காரணம், சங்கரின் 'கேம் சேஞ்சர்' ஜன.10ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்ததால், நேசிப்பாயா திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதால் 'பொங்கல் ரேஸில் - தந்தை vs மகள்' என சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.

அதேபோல், இந்த திரைப்படத்தை தயாரித்த XB பிலீம் கிரியேட்டர்ஸ் இதற்கு முன் விஜய் நடிப்பில் 'மாஸ்டர்' திரைப்படத்தை தயாரித்து 2021 பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் செய்திருந்தனர். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு அவர்கள் தயாரித்த 'நேசிப்பாயா' திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது என்பதால் மாஸ்டரை போல் இதுவும் வெற்றி பெறுமா எனவும் கேள்வி இருந்தது. மேலும், வெளிநாட்டு ஒளிப்பதிவாளர், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு, யுவன் சங்கர் ராஜா இசை என பல்வேறு எதிர்பார்ப்புகளும் இருந்தது.

நேசிப்பாயா - பிளஸ் பாயின்ட்கள்

காதல் சார்ந்த திரைப்படம் என்றாலும் காதல் காட்சிகளை நறுக் சுறுக் என வைத்தது பெரிய பிளஸ். ஆனால் அது முதல் பாதியில் மட்டும்தான்... பிற்பாதியில் இன்னும் சில இடங்களில் நறுக்கியிருக்கலாம். அதை பின்னர் பார்ப்போம். ஒளிப்பதிவு, காட்சியமைப்பு ஆகியவை நம் கவனத்தை சிதறடிக்காமல் கதைக்குள் ஈர்க்கும் வண்ணம் இருந்தது. யுவனின் இசையும் ஆங்காங்கே கைக்கொடுத்தது. விஷ்ணுவர்தனின் சிக்னேச்சர் வசனங்களும் படத்திற்கு பிளஸ் எனலாம். உதாரணத்திற்கு, கதாநாயகி, கதாநாயகனிடம் காதலை வெளிப்படுத்தும் காட்சியை சொல்லலாம்.

மேலும் படிக்க | ஜாலியா? காலியா? மத கஜ ராஜா படம் எப்படி? நெத்தியடி திரை விமர்சனம்!!

நேசிப்பாயா - மைனஸ் பாயின்ட்கள்

படத்தின் நீளம் முதல் மைனஸ். ஸ்ரீகர் பிரசாத்தை இன்னும் சில இடங்களை நறுக்கியிருக்க இயக்குநர் அனுமதித்திருக்க வேண்டும். திரைக்கதையில் விஷ்ணுவர்தனுடன், நீலன் சேகரும் பணியாற்றி உள்ளார். அறிந்தும் அறியாமலும் படத்திலும் இதே கூட்டணிதான் திரைக்கதையில் பங்காற்றியது. ஆனால், நேசிப்பாயா திரைப்படத்தில் அவர்கள் எதிர்பார்த்த திரைக்கதை ட்ரீட்மெண்ட், திரையில் சரியாக கைக்கூடி வரவில்லை என்பது மட்டும் தெள்ளத்தெளிவாக தெரிந்தது. அதற்கு முக்கிய காரணம், நடிகர்களின் தேர்வு...

ஆகாஷ் முரளியிடம் ஆங்காங்கே 'அதர்வா' எட்டிப்பார்க்கிறார். குரல் இயல்பானது, அதில் இருவருக்கும் ஒற்றுமை இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ஒரு சில உடலசைவுகள், முக பாவங்கள் ஆகியவற்றிலும் ஆகாஷ் முரளியிடம் 'அதர்வா' தெரிவதுதான் சற்று நெருடலாக இருக்கிறது. ஆனால், முதல் படம் என்பதால் இதை குறையாக எண்ணாமல் அடுத்த படத்தில் நிச்சயம் திருத்திக்கொள்ளலாம்.

மறுபுறம் அதிதி, இன்னும் முதிர்ச்சியான நடிப்பை முக்கிய காட்சிகளில் வெளிப்படுத்த தவறுகிறாரோ என ரசிகர்களை தோன்ற வைக்கிறது. அவரும் இன்னும் சிரத்தை எடுத்து நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும். சிறையில் கதாநாயகன் - கதாநாயகி சந்திக்கும் காட்சி இரண்டாம் பாதியில் முக்கிய காட்சி ஆகும். இந்த காட்சி அந்த கதாபாத்திரங்களின் முழுமையான உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்தாததற்கு இவர்களின் நடிப்பில் தெரியும் குறைபாடும் ஒரு காரணம் எனலாம்.

மற்றபடி, துணை கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்திருக்கிறார்கள். தொழில்நுட்ப ரீதியில் பலமாக தென்படும் நேசிப்பாயா, கதாபாத்திர தேர்விலும், திரைக்கதை ட்ரீட்மெண்டிலும் சறுக்கியிருக்கிறது.

நேசிப்பாயா - பார்க்கலாமா...? வேண்டாமா...?

கண்டிப்பாக, எந்த படத்தையும் பார்க்காதீர்கள் என சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது. அதேநேரத்தில் நீங்கள் கொடுக்கும் டிக்கெட்டின் விலை, பார்க்கிங் விலை, திரையரங்கில் உண்ணும் உணவுகளின் விலை, உங்களின் 3 மணிநேரம் ஆகியவைக்கு எந்த மதிப்பும் இல்லை என நினைத்தால், நிச்சயம் நேசிப்பாயா திரைப்படத்தை திரையரங்கில் சென்று பார்க்கலாம்.

மேலும் படிக்க | வித்தியாசமான திரில்லர்! தருணம் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News