என்னை நிறைய நடிகைகள் நிராகரித்தனர்! வேதனையுடன் பேசிய பிரதீப் ரங்கநாதன்!

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது.

Written by - RK Spark | Last Updated : Feb 15, 2025, 03:54 PM IST
  • அடுத்த வாரம் வெளியாகும் டிராகன்.
  • பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ளார்.
  • அஸ்வத் மாரிமுத்து படத்தை இயக்கி உள்ளார்.
என்னை நிறைய நடிகைகள் நிராகரித்தனர்! வேதனையுடன் பேசிய பிரதீப் ரங்கநாதன்! title=

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் 'யங் ஸ்டார் ' பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி பிப்ரவரி 21ம் தேதி  திரையரங்குகளில் வெளியாகும் 'டிராகன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.‌ 'ஓ மை கடவுளே' புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'டிராகன்' திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் , கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க | வணங்கான் vs கேம் சேஞ்சர்! இரண்டில் எது நல்லாயிருக்கு? பொங்கலுக்கு எதை பார்க்கலாம்?

நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ்ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றியிருக்கிறார். வரும் 21ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டிராகன்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி 1.3 கோடிக்கும் மேற்பட்டவர்களால் பார்வையிடப்பட்டு, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

இந்த விழாவில் விக்னேஷ் சிவன் பேசுகையில், ''திரைப்பட விழாவிற்கு வருகை தந்தது போல் இல்லை. பிரதீப், அஸ்வத், அர்ச்சனா மேடம் என இங்கு என்னுடைய நண்பர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். பிரதீப்புடன் இணைந்து 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'  திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்திற்காக அவரை சந்திக்கும் போது நான் என்னுடைய திரையுலக பயணத்தில் கடினமான சூழலில் இருந்தேன். இருந்தாலும் உடனடியாக என்னை அழைத்து நான் சொன்ன கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து- ஈகோ இல்லாத எளிமையாய் பழகக்கூடிய இனிய நண்பர்.‌ அவருடன் இணைந்து பணியாற்றும் போது எளிதாக இருந்தது. இந்த படத்தின் பாடல்களை எழுதும் போதும் மறக்க முடியாத அனுபவங்கள் உண்டு என்றார்.

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், ''இன்று நான் எந்த கெட்ட வார்த்தையையும் பேச மாட்டேன். ஒரு வருடம் வரை எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளக் கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனால் தயாரிப்பாளர் அகோரம் சார், அர்ச்சனா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய மூவர் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாகத்தான் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன். அர்ச்சனா மற்றும் ஐஸ்வர்யா என இருவரும்.. அவர்கள் தயாரிக்கும் படங்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள். அவர்கள் மேலும் தொடர்ந்து வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். பிரதீப், புரூஸ் லீ போன்றவர். அவர் இதுவரை ஆக்ஷன் படங்களில் நடிக்கவில்லை. ஒரு வேளை என்னுடைய இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கலாம். நீண்ட நாள் கழித்து திரையுலகில் நான் ஒரு யங் ஸ்டாராக பிரதீப்பை பார்க்கிறேன். அவர் ஒரு பிரைட்டஸ்ட் ஸ்டார். அவர் இதற்காக கடுமையாக உழைக்கிறார், உழைத்து வருகிறார்.‌ இன்னும் கூடுதல் உயரத்திற்கு செல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன்,'' என்றார்.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், ''உங்களில் ஒருவனை இந்த மேடையில் நிற்க வைத்ததற்காக நன்றி தெரிவிக்கிறேன். இந்த படம் உருவாக காரணமாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ஏ.ஜி.எஸ் நிறுவனத்துடனான என்னுடைய தொடர்பு தற்போது வணிக எல்லையை கடந்து நட்பாக மாறிவிட்டது. தயாரிப்பாளர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் நன்றி. கடினமாக உழைத்தால் வாழ்க்கை மாறும் என்பதற்கு இப்படத்தில் நடித்த விஜே சித்து ஒரு சிறந்த உதாரணம். ஹர்ஷத் கான் சிறந்த நடிகர். திறமைசாலி. 'லவ் டுடே' படத்தில் நான் நாயகனாக நடிக்கிறேன் என்றபோது என்னுடன் இணைந்து நடிக்க நடிகைகள் முன் வரவில்லை. என்னுடன் நடிப்பதை தவிர்க்க பல காரணங்களை சொன்னார்கள். சில நடிகைகள் மட்டும் தான் உங்களுடன் இணைந்து நடிக்க முடியாது, நான் உங்களை விட சற்று பிரபலமான நடிகர்களுடன் இணைந்து நடிப்பதை தான் விரும்புகிறேன் என்று சொன்னார்கள்.

என்னுடைய நிலை இப்படி இருக்க.. இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட போது இயக்குநர் அஸ்வத், 'உனக்கு ஜோடி அனுபமா பரமேஸ்வரன்' என சொன்னார். அவர்கள் நடித்த பிரேமம் திரைப்படம் வெளியானபோது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் பாடிய அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பேன். அப்போது அவர்களுடன் இணைந்து நடிப்பேன் என்று கனவு கூட கண்டதில்லை. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில்  அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிக்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன். படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் அனைவரிடமும் இயல்பாக பழகினார்கள். காட்சியிலும் அற்புதமாக நடித்தார்கள். அவர்களிடம் இருந்து அப்படி ஒரு நடிப்பை நான் எதிர்பார்க்கவில்லை. அதனால் அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் பணியாற்றிய ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.

மேலும் படிக்க | காதலர் தினத்தில் ஓடிடியில் வெளியாகும் 11 படங்கள்! எந்த தளத்தில், எதை பார்க்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News