இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இங்கிலாந்துக்கு எதிரான வெள்ளை பந்து தொடரிலும், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சாம்பியன் டிராபியிலும் இடம் பெற உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு குதிகால் அறுவை சிகிச்சை காரணமாக ஓய்வில் இருந்த முகமது ஷமி, மீண்டும் இந்திய அணிக்குத் திரும்ப உள்ளார்.
பிசிசிஐ மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவக் குழு முகமது ஷமியை கண்காணித்து வருகிறது. வலது குதிகாலின் அறுவை சிகிச்சைக்குப் பிறகு முகமது ஷமி சற்று முன்னேற்றம் அடைந்தார். ஆனால் முழங்காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவரால் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட முடியவில்லை.
தயாராகும் முகமது ஷமி
இதனை அடுத்து சமீபத்தில் அவர் விஜய் ஹசாரே டிராபியில் பெங்கால் அணிக்காக விளையாடினார். தொடர்ந்து பரோடாவில் ஹரியானாவிற்கு எதிராக முன் காலிறுதி போட்டியில் விளையாடுவது கவனிக்கப்படும். அவர் விளையாடத் தயாராக இருக்கிறாரா என்பதை பார்க்க இந்திய தேர்வர்கள் அங்கு இருப்பார்கள். மேலும், முகமது ஷமி தொடர்ந்து கண்காணிக்கப்படுவார் என்றும் தேசிய கிரிக்கெட் மருத்துவக் குழுவின் பிசியோதெரபிஸ்ட் அவருடன் இருப்பார் என்றும் பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது.
அவர் இந்திய அணியில் மீண்டும் விளையாடுவது தேசிய கிரிக்கெட் அகாடமியின் ஒப்புதலைப் பொறுத்தது என்றாலும், ஷமி தயாராக உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. விஜய் ஹசாரே நாக் அவுட் சுற்றில் விளையாடுவதைப் பொறுத்து அவர் இங்கிலாந்துக்கு எதிரான வெள்ளை பந்து தொடரிலும், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சாம்பியன் டிராபியிலும் சேர்க்கப்படலாம்.
மேலும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி: இந்த 3 சீனியர் வீரர்களுக்கு டாட்டா... இந்திய அணியின் மெகா பிளான்
ஆகாஷ் தீப் விளையாட வாய்ப்பில்லை
வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் சமீபத்தில் நடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிய நிலையில் அவருக்குக் கடைசி டெஸ்ட்க்கு முன்பாக முதுகுவலி காரணமாக அவர் அந்த போட்டியில் விளையாடவில்லை. குறைந்தது அவர் ஒரு மாதமாவது ஓய்வில் இருப்பார் என்றும் இந்தியாவிற்கு திரும்பிய பின்பு பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சேர்க்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
பும்ராவின் நிலை என்ன?
ஜஸ்பிரித் பும்ரா SCG-ல் நடைபெற்ற கடைசி மற்றும் 5வது டெஸ்ட்டின் போது முதுகுவலியால் அவதி அடைந்ததால் அவரால் அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீச முடியாமல் போனது. இதுவரை அவர் ஓய்வில் உள்ள நிலையில் இந்திய தேர்வர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியின் அறிக்கைகாக காத்திருக்கின்றனர்.
இந்திய அணியின் தேர்வு எப்போது?
இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் ஜன.22ஆம் தேதி முதல் பிப். 12ஆம் தேதி வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் விளையாட உள்ளது. அதனைத் தொடர்ந்து இந்திய அணி சாம்பியன் டிராபி தொடர் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணிகளைத் தேர்வு செய்யத் தேர்வுக் குழு ஜன.12ஆம் தேதி கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க: கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்கும் கேஎல் ராகுல்?