தொடர்ந்து மூன்றுவது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் 75 சதவீதத்துக்கும் அதிகமான அரசு பேருந்துகள் இயங்கவில்லை என போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால், சென்னை உள்பட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொது மக்கள் வெள்ளிக்கிழமையும் கடும் அவதிக்கு உள்ளாகினர். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அலுவலகங்களுக்குச் சென்றோர் கடுமையான சிரமங்களைச் சந்தித்தனர்.
ஊதிய உயர்வு, அரசுத் துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை மாலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனால், சென்னை கோயம்பேடு, திருச்சி மத்திய பேருந்து நிலையம், மதுரை மாட்டுத்தாவணி, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் என தமிழகத்தின் முக்கிய பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. அரசுப் பேருந்துகள் அனைத்தும் பணிமனைகளில் நிறுத்தப்பட்டதால், பெரும்பாலான நகரங்களில் தனியார் பேருந்துகளே அதிகளவில் இயக்கப்பட்டன.
வட மாவட்டங்கள்: சென்னையின் பிரதான பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நகரப் பேருந்துகள், வெளியூர் செல்லும் பேருந்துகள் என எந்தப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பொது மக்கள் புறநகர் ரயில்களில் அதிகளவு பயணம் செய்தனர். இதனால், புறநகர் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்டது
இதேபோன்று, சென்னை மெட்ரோ ரயிலிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்தே இருந்தது. சென்னைவாசிகள் புறநகர், மெட்ரோ ரயில்களில் பயணித்தாலும், நகரின் உட்புறப் பகுதிகளுக்குச் செல்ல ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆட்டோக்களின் பயன்பாடு அதிகரித்ததால், அவற்றுக்கான கட்டணமும் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்தது. தனியார் வாடகை கார்களும் கட்டணத்தை ஏற்றின.
சென்னையைப் போன்றே விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதே நேரத்தில் இந்த மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் முழுஅளவில் இயக்கப்பட்டன. ஆனாலும், அவை பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்பதால், மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். புதுவையிலும் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த 135 தமிழக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இவற்றில், 10 சதவீதப் பேருந்துகளை ஆளும் கட்சியான அதிமுகவின் துணை அமைப்பான அண்ணா தொழிற்சங்கத்தினர் இயக்கினர்.
கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. சேலம், திருச்சி, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கான அரசுப் பேருந்து சேவை 10 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது. கும்பகோணம், மதுரை கோட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளும் முற்றிலுமாக இல்லை. அதே சமயத்தில் பெரும்பாலான நகர பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதனால், ஈரோடு, திருச்சி, கரூர், திண்டுக்கல் செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாயினர். சில இடங்களில் அரசுப் பேருந்துகளை தனியார் வாகன ஓட்டுநர்களும், புதியவர்களும் இயக்கியதால், பொதுமக்கள் அரசுப் பேருந்துகளில் செல்ல அச்சப்பட்டனர். இதனால், இயக்கப்பட்ட சில அரசு பேருந்துகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
தனியார் பேருந்துகள் மூலம் பேருந்துகள் இயக்கம்.
Commuters face problems as strike by Transport workers' unions in #TamilNadu continues for the third day, they are demanding wage hike among other things. Visuals from #Chennai's Koyambedu bus terminal. pic.twitter.com/UJEk25cmnp
— ANI (@ANI) January 6, 2018