சென்னை: அடுத்த வாரம் வியாழக்கிழமை மு.க. ஸ்டாலின் தலைமையில் காஷ்மீரில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், அரசியல் கட்சித் தலைவர்களை விடுதலை செய்யவும் வலியுறுத்தி திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி எம்.பி-க்களும் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க பரிந்துரை செய்யும், இந்த மாசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370 பிரிவு நீக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து முடிவேடுப்பதற்கு முன்பாக காஷ்மீர் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது. மேலும் மாநிலத்தின் முக்கிய தலைவர்களை வீட்டுக்காவலிலும், சிறையிலும் வைக்கப்பட்டனர். இதற்கு திமுக உட்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை நிறுத்தி வைக்கக்கோரி அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சி குழுவை காஷ்மீருக்கு அனுப்ப வேண்டும். அங்கு அந்த மக்களுடன் கலந்து பேசி ஆலோசனை செய்த பின்னர், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசின் நடவடிக்கையால், ஏற்கனவே காஷ்மீரில் இருந்த அச்சுறுத்தலை விட மேலும் அச்சுறுத்தல் கூடியுள்ளது என கடந்த 10 ஆம் தேதி நடைபெற்ற ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில், இன்று காஷ்மீரில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி 22 ஆம் தேதி டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதுக்குறித்து அவர் கூறியது, “காஷ்மீரில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், அரசியல் கட்சித் தலைவர்களை விடுதலை செய்யவும் வலியுறுத்தி, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி எம்.பி-க்களும் டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அன்று கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.